கடந்த 9 மாதங்களில் பராமரிப்பு காரணங்களுக்காக 35,026 ரயில்கள் ரத்து: ஆர்டிஐ தகவல்

பராமரிப்பு காரணங்களுக்காக 2021-22 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 35,036 ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டதாக ஆர்டிஐ கேள்விக்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
கடந்த 9 மாதங்களில் பராமரிப்பு காரணங்களுக்காக 35,026 ரயில்கள் ரத்து: ஆர்டிஐ தகவல்


புதுதில்லி: பராமரிப்பு காரணங்களுக்காக 2021-22 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 35,036 ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டதாக ஆர்டிஐ கேள்விக்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் குவார் என்பவர், நடப்பு நிதியாண்டில் எத்தனை ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன என தகவல் அறியும் சட்டத்தின்கீழ் கேட்டிருந்தார். 

இதற்கு ரயில்வே நிர்வாகம் அளித்துள்ள பதிலில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 9 மாதங்களில் பராமரிப்பு காரணங்களுக்காக 35,026 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது, 2021-22 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 20,941 ரயில்களை ரத்து செய்துள்ளதாகவும், அடுத்த காலாண்டில் 7,117 ரயில்கள் ரத்து செய்ததாகவும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் 6,869 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

2014 ஆம் ஆண்டில், பராமரிப்புப் பணிகள் காரணமாக 101 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன, மேலும் 2017 இல் 829 ஆகவும், 2018 இல் 2,867 ஆகவும், 2019 இல் 3,146 ஆகவும் அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய வரலாற்றில் 2019 ஆம் ஆண்டில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சுமார் 3,146 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதே அதிக எண்ணிக்கையாக இருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும் கடந்த 9 மாதங்களில் 41,483 ரயில்களின் சேவை திட்டமிடப்பட்ட நேரத்தை தாண்டி தாமதமாக இயக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், ரயில்வே சிறப்பு ரயில்களை மட்டுமே இயக்கியபோது, ​​7,050 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் நேரமின்மை செயல்திறன் 94 சதவிகிதமாக இருந்தது.

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 14,249 ரயில்கள் தாமதமாக வந்தபோது இது 92 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் ரயில் செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு வந்தபோது, ​​20,184 ரயில்கள் தாமதமாகி, செயல்திறன் மேலும் 89 சதவிதமாக குறைந்தது என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 15,199 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக வந்ததாகவும், அதே காலகட்டத்தில் 26,284 பயணிகள் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாகவும், மொத்த தாமதமான ரயில்களின் எண்ணிக்கை 41,483 ஆக உயர்ந்துள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

உண்மையில், அக்டோபர் முதல் டிசம்பர் வரை காலாண்டில் 15,334 பயணிகள் ரயில்கள் தாமதமாக வந்தன.

எவ்வாறாயினும், பராமரிப்புப் பணிகள் காரணங்களுக்காக கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை சுமார் 35,026 ரயில்கள் ரத்து செய்யப்பட்டபோது எத்தனை பயணிகள் பாதிக்கப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

"நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தேய்ந்து போன ரயில்வே பாதைகளில் சீரமைப்பு செய்ய வேண்டிய வேலைகளின் அளவையே இது காட்டுகிறது" என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

கரோனா நோய்த்தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டில் பெரும்பாலான பகுதிகளுக்கான அனைத்து சாதாரண பயணிகள் சேவைகளையும் நிறுத்திவிட்டு, ஆண்டு முழுவதும் சிறப்பு ரயில்களை மட்டுமே இயக்கிய ரயில்வே, கடந்த ஆண்டு நவம்பரில் அதன் செயல்பாட்டை மீண்டும் தொடங்கியது.

அடுத்த சில ஆண்டுகளில் ரூ.1,15,000 கோடி மதிப்பிலான 120க்கும் அதிகமான முக்கிய திட்டங்களை நிறைவேற்ற உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com