‘எங்களுக்கு நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம்’ : பாஜகவுக்கு திரிணமூல் எம்பி பதிலடி

கடவுளை எப்படி வணங்க வேண்டும் என வங்காள மக்களுக்கு பாஜகவினர் பாடம் எடுக்கத் தேவையில்லை என திரிணமூல் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
திரிணமூல் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா
திரிணமூல் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா
Published on
Updated on
1 min read

கடவுளை எப்படி வணங்க வேண்டும் என வங்காள மக்களுக்கு பாஜகவினர் பாடம் எடுக்கத் தேவையில்லை என திரிணமூல் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இயக்குநர் லீனா மணிமேகலை இயக்கத்தில் உருவாகியுள்ள காளி ஆவணப்படத்தின் போஸ்டர் பலத்த சர்ச்சைகளை கிளப்பியது. ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாகக் கூறி பாஜகவினர் உள்ளிட்ட பலரும் இயக்குநர் லீனா மணிமேகலைக்கு எதிராக கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

எனினும் ஹிந்து கடவுள் காளி இறைச்சி உண்பவராகவும், மது அருந்துபவராகவும் கற்பனை செய்வது எனது சுதந்திரம் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா குறிப்பிட்டு இயக்குநர் லீனா மணிமேகலைக்கு ஆதரவு வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து திரிணமூல் எம்பி மஹுவா மொய்த்ராவை கைது செய்ய வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக பேசியுள்ள மஹூவா மொய்த்ரா, “தெய்வங்களை வழிபடுவது தொடர்பாக பாஜகவினர் தங்களது கருத்துகளைத் திணிக்க முடியாது. கடந்த 2000 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு முறைகளில் மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்துத்துவக் கருத்துக்களை விதைக்கும் பாஜகவினருக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் முதிர்ந்த தலைவராக தான் நடந்து கொண்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

“காளி தெய்வத்திற்கு இப்படித் தான் வழிபாடு நடத்த வேண்டும் என கட்டாயப்படுத்த பாஜகவினர் யார்? எனக் கேள்வி எழுப்பியுள்ள மொய்த்ரா காமாக்யா கோவிலில் என்ன பிரசாதம் வழங்கப்படுகிறது என்பதை அசாம் முதல்வர் நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக விளக்க முடியுமா? இந்தக் கோயில்களில் பிரசாதமாக மதுபானம் இல்லையா? பிஜேபியின் தவறான செயல்களை நான் கடுமையாக எதிர்க்கிறேன். எனவே பாஜக என்னை ஒடுக்க நினைக்கிறது” என மொய்த்ரா தெரிவித்துள்ளார்.

காளி தெய்வம் தொடர்பான மஹுவா மொய்த்ரா கருத்தை ஆதரிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி அவருக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com