பங்குச்சந்தை தகவல் கசிவு மோசடி: சித்ரா ராமகிருஷ்ணா மீது மேலும் ஒரு வழக்கு

தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா மீது பங்குச் சந்தை தகவல் கசிவு மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சித்ரா ராமகிருஷ்ணா
சித்ரா ராமகிருஷ்ணா

தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா மீது தேசிய பங்குச் சந்தை ஊழியர்களின் தொலைபேசிகளை 2009 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் ஒட்டுகேட்டதாக, பங்குச் சந்தை தகவல் கசிவு மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பங்குச் சந்தை தகவல் கசிவு மோசடி வழக்கு தொடா்பாக மும்பை முன்னாள் காவல் ஆணையா் சஞ்சய் பாண்டேயிடம் அமலாக்கத் துறையினா் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர். இந்நிலையில், தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, ரவி நாராயண் மற்றும் சஞ்சய் பாண்டே மீது புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று இந்த புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதில், ஊழியர்களின் தனிப்பட்ட செல்லிடப்பேசி உரையாடல்களும் ஒட்டுக்கேட்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய மூத்த அதிகாரிகள் கூறுகையில், ஊழியர்களின் தொலைபேசி உரையாடல் பதிவுகள் அனைத்தும் ராமகிருஷ்ணா மற்றும் நாராயணனிடம் வழங்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு கோ-லொகேஷன் மோசடி வெளிச்சத்துக்கு வந்தபோதுதான், உரையாடல் பதிவுகள் அளிப்பது நிறுத்தப்பட்டது என்கிறார்கள்.

பணப் பரிவா்த்தனை மோசடி சட்டத்தின் கீழ் சஞ்சய் பாண்டேவிடம் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், சஞ்சய் பாண்டே உள்ளிட்ட மூவர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.

இந்த புதிய வழக்கின் அடிப்படையில், பாண்டேவுக்குத் தொடர்புடைய மும்பை, புணே உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நகரங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் 30-ஆம் தேதி மும்பை காவல் ஆணையா் பதவியில் இருந்து சஞ்சய் பாண்டே ஓய்வு பெற்றாா். மாா்ச் 1-ஆம் தேதி முதல் அவா் மகாராஷ்டிர மாநில பொறுப்பு டிஜிபியாகவும் பதவி வகித்தாா்.

தேசிய பங்குச் சந்தையின் பாதுகாப்புத் தணிக்கையை ஆய்வு செய்யும் பல்வேறு நிறுவனங்களில் கடந்த 2001-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐசெக் பாதுகாப்பு நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தின் இயக்குநா் பதவியில் இருந்து 2006-இல் சஞ்சய் பாண்டே விலகினாா். அதன்பின்னா் அவரது மகனும் தாயாரும் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறாா்கள்.

தேசிய பங்குச் சந்தையின் தணிக்கை பாதுகாப்பை ஐசெக் நிறுவனம் ஆய்வு செய்தபோது என்ன மாதிரியான தகவல்கள் கிடைத்தன என்பது குறித்து அமலாக்கத் துறை சஞ்சய் பாண்டேயிடம் கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது.

இந்த முறைகேடு வழக்கில் தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, என்எஸ்இ குழும செயல் அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களிடம் இந்த வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறை வாக்குமூலம் பதிவு செய்துவிட்டது.

தேசிய பங்குச் சந்தையில் நடந்த மோசடி வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணா தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com