தமிழகத்தில் புதிதாக ஒரு ஸ்டாலினிசம்!

உலகம் முழுவதும் நிறைய இசங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் இன்று புதிதாக ஒரு இசம் அறிமுகமாகியுள்ளது - ஸ்டாலினிசம்!
தமிழகத்தில் புதிதாக ஒரு ஸ்டாலினிசம்!
Published on
Updated on
2 min read

உலகம் முழுவதும் நிறைய இசங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் இன்று புதிதாக ஒரு இசம் அறிமுகமாகியுள்ளது - ஸ்டாலினிசம்!

கம்யூனிசம், (ஜோசப்) ஸ்டாலினிசம், சோசலிசம், கேபிடலிசம், காந்தியிசம், மாவோயிசம், பாசிசம், நியூட்ரலிசம், லிபரலிசம்... இப்படி ஏராளமாக வழங்கி வருகின்றன (வணிகத் துறையில் ஃபோர்டிசம், டொயோட்டோயிசம் என்றெல்லாம் நிறைய இருக்கின்றன).

ஒரு குறிப்பிட்ட கொள்கையையும் கொள்கைவழியையும் குறிப்பிட இந்தச் சொற்கள் பயன்படுகின்றன. அரசியலில், வாழ்க்கையில் இவற்றைப் பின்பற்றுவோரும் கம்யூனிஸ்ட்டுகள், சோசலிஸ்டுகள்... என்று இசங்களைச் சார்ந்து அழைக்கப்படுகிறார்கள்.

1973 செப்டம்பரில் அண்ணா திமுகவின் கொள்கை அறிக்கையொன்றை அன்றைய கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் வெளியிட்டார்.  கட்சியின் கொள்கையைச் சுருக்கமாக அண்ணாயிசம் என்பதாக அறிவித்தார் அவர். அப்போது கொஞ்சம் குழப்பமாகத்தான் இருந்தது பலருக்கும்.

அண்ணா சரி, அண்ணாயிசம் என்றால் என்ன? பிறகு அதற்கொரு சுருக்க விளக்கம் அளித்தார் எம்.ஜி.ஆர். காந்தியிசம், கம்யூனிசம், கேபிடலிசம் ஆகிய மூன்றிலுமுள்ள நல்ல அம்சங்களைக் கொண்டதுதான் அண்ணாயிசம்! அதன் பிறகு அந்த இசம் பற்றி மக்கள் யாரும் கவலைப்பட்டார்களா, தெரியவில்லை. ஆனால், பின்னர் வந்த தேர்தலில் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். தன் வாழ்நாள் முழுவதும் தமிழக முதல்வராக இருந்துவிட்டுச் சென்றார். 

ஏற்கெனவே புரட்சிக்கும் லெனினுக்கும் பிந்தைய ரஷியாவில் இறுக்கமான ஆட்சியை நடத்திய அதிபர் ஜோசப் ஸ்டாலின் நடவடிக்கைகளையொட்டி, உலகு தழுவிய அளவில் ஒரு ஸ்டாலினிசம் இருக்கிறது.

கம்யூனிஸ்டுகளிலேயே இந்த ஸ்டாலினிசத்தை ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள், எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். ஏனெனில், ஸ்டாலினுடைய ஆட்சிமுறை அப்படி!

அதே ஸ்டாலினிசம் என்ற சொல் இப்போது தமிழகத்தில் புதிய கருத்தாக்கத்தில் மீண்டும்  அறிமுகமாகியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின்-இசமாக. (அந்த ஸ்டாலின் நினைவாகத்தான் இவருக்கும் ஸ்டாலின் என்று பெயர் வைத்தார் அவருடைய தந்தையும் தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதி என்பது வேறு விஷயம்!).

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருவண்ணாமலையில் பல்வேறு விழாக்களில் சனிக்கிழமை கலந்துகொள்கிறார். இந்த விழாக்களையொட்டி, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி, சிறப்பிதழாக ஏராளமான விளம்பரங்களுடன், 32 பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

இந்த விளம்பரங்களில் திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள இரு பக்க விளம்பரத்தில்தான் புதிய (மு.க.) ஸ்டாலினிசம் அறிமுகம்! எம்.ஜி.ஆர். சொன்னதைப் போல இந்த ஸ்டாலினிசத்துக்கும் எதிர்காலத்தில் ஏதேனும் விளக்கங்கள் தரப்படலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com