திருவண்ணாமலையில் ரூ.340 கோடி மதிப்பில் 246 புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் - முழு விவரம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.70.27 கோடி செலவில் 91 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். 
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.70.27 கோடி செலவில் 91 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். 
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.70.27 கோடி செலவில் 91 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று திருவண்ணாமலை சென்றார். நேற்று திருவண்ணாமலையில் அண்ணா நுழைவாயில் மற்றும் கருணாநிதி சிலை திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். 

அதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.70.27 கோடி செலவில் 91 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.340.21 கோடி மதிப்பீட்டில் 246 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 

மேலும், ரூ.693.03 கோடி மதிப்பில் 1,71,169 பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ஜவ்வாதுமலை நம்மியம்பட்டு மற்றும் தேவிகாபுரம் ஆகிய இடங்களில் வருவாய் ஆய்வாளர் குடியிருப்புடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள், மேல்செட்டிப்பட்டில் கிராம நிர்வாக அலுவலர் குடியிருப்புடன் கூடிய அலுவலகம், தண்டராம்பட்டு மற்றும் செங்கம் ஆகிய இடங்களில் குறுவட்ட அளவர் குடியிருப்புக் கட்டடம், என 94 இலட்சத்து 58 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள்;

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட நிதி வருவாய் திட்டத்தின் வாயிலாக 6  கோடியே 3 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் மற்றும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், சாவல்பூண்டி ஊராட்சியில் 15 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பொதுவிநியோகக் கடை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 9 கோடியே 93 இலட்சத்து 93 ஆயிரம் ரூபாய் செலவில் முடிவுற்ற 42 பணிகள்;

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் நாயுடுமங்கலம், வள்ளிவாகை, எடத்தனூர், மேல்புழுதியுர் ஆகிய இடங்களில் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கக் கட்டடங்கள் மற்றும் 44 இலட்சத்து 16 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஏ.டி.எம். மையம் மற்றும் நடமாடும் ஏடிஎம் வங்கிச் சேவை;

நகராட்சி  நிர்வாகம் மற்றும்  குடிநீர் வழங்கல் துறை சார்பில் செங்கம் பேரூராட்சியில் கசடு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையக் கட்டடம்,  திருவத்திபுரம் நகராட்சியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் நகர்ப்புற வீடற்றோருக்கான இரவு தங்கும் கட்டடங்கள் என 3 கோடியே 19 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவிலான கட்டடங்கள்;

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் போளூர், சேத்பட், தெள்ளார் ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள், தச்சம்பட்டு மற்றும் களம்பூரில் துணை வேளாண் விரிவாக்க மையக் கட்டடங்கள், என 6 கோடியே 76 இலட்சம் ரூபாய் செலவிலான கட்டடங்கள்;

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் தேசிய நெடுஞ்சாலை எண் 234-ல் (புதிய எண்.38) 19 கோடியே 31 இலட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பாலம்;

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் திருவண்ணாமலை, வந்தவாசி, செய்யார், ஆரணி ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவமனைக் கட்டடங்கள், களம்பூர், செங்கம், நவம்பட்டு, தண்டராம்பட்டு, மங்கலம் ஆகிய இடங்களில் கால்நடை மருந்தக் கட்டடங்கள், என 4 கோடியே 12 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலான கட்டடங்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய வளாகத்தில் 32 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பால்கோவா, மைசூர்பாகு, குல்பி மற்றும் பாதாம் பவுடர் உற்பத்தி அலகு;

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மேல்பென்னாத்தூர், மேல்செங்கம், புதூர் ஆகிய இடங்களில் 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார மையக் கட்டடங்கள்;

உயர்கல்வித் துறை சார்பில் திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி கலைக் கல்லூரியில் 7 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள், செய்யார் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 4 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்கள்;

பள்ளிக்கல்வித் துறை சார்பில் தானிப்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள கலை மற்றும் கைவினை அறை, நூலகம், கணினி அறை, இயற்பியல் ஆய்வகம், வேதியியல் ஆய்வகம்,  உயிரியியல் ஆய்வகம் மற்றும் கழிவறை, ஆவூர் மற்றும் தொரப்பாடி ஆகிய இடங்களில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளிகள், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளி, போளூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காரப்பட்டு அரசினர் மேல்நிலைப் பள்ளி, சேத்பட் பழம்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள கழிவறைக் கட்டடங்கள், என 1 கோடியே 70 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள்;

முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் திருவண்ணாமலையில் 3 கோடியே
3 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முன்னாள் படைவீரர்கள் மாளிகை; தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் ஜமுனாமரத்தூர்  அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 13 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறை;

கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை சார்பில் பொன்னூரில்
23 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீமுருகன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க அலுவலகக் கட்டடம் மற்றும் அம்மாப்பாளையத்தில் 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள  ஸ்ரீசாமூண்டீஸ்வரி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க அலுவலகக் கட்டடம்;

என மொத்தம் 70 கோடியே 27 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள
91 முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

அடிக்கல் நாட்டப்பட்டுள்ள புதிய திட்டப்பணிகள்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில்    திருவண்ணாமலை நகராட்சியில் 30 கோடியே 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம், போளூர் பேரூராட்சியில் 4 கோடியே 3 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம், கடலூர் - சித்தூர் சாலைப் பகுதியில் உள்ள மயானத்தில் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை;

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கீழ்பென்னாத்தூர், வந்தவாசி மற்றும் அனக்காவூர் ஆகிய இடங்களில் 7 கோடியே 71 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள், முள்ளண்டிரம், மாமண்டூர், அரியூர், தேவிகாபுரம் ஆகிய இடங்களில் 1 கோடியே 52 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை வேளாண் விரிவாக்க மையங்கள்;

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவண்ணாமலை  செட்டிப்பட்டு முதல் தண்டராம்பட்டு வழியாக கொளமஞ்சனூர் வரையில் உள்ள இரு வழி சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி;

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் நபார்டு சாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 4 பணிகள், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட நிதி வருவாய் திட்டத்தின் கீழ் 4 பணிகள், 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் 11 பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 17 பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 33 பணிகள், முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு குடியிருப்பு கட்டும் திட்டத்தின் கீழ் 30 பணிகள், பிரதம மந்திரி சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 39 பணிகள், அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் புதிய குளம் அமைத்தல் மற்றும் பழைய குளம் புனரமைத்தல் ஆகிய 79 பணிகள், என மொத்தம் 157 கோடியே 74 இலட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 217 புதிய பணிகள்;

நீர்வளத் துறை சார்பில் செய்யாறு, செய்யாறு அணைக்கட்டு, பெரணமல்லூர், கோவிலூர், வீரம்பாக்கம்  ஆகிய இடங்களில் பாசன பிரிவு அலுவலகக் கட்டடங்கள், ஆரணி வட்டம், எஸ்.வி.நகரம் கிராமத்தில் 1 உதவி செயற்பொறியாளர் குடியிருப்பு, 2 உதவி பொறியாளர் குடியிருப்பு மற்றும் பாசன உதவியாளர் குடியிருப்புகள் கட்டும் பணி, என மொத்தம் 1 கோடியே 84 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 6 புதிய திட்டப்பணிகள்;

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தானிப்பாடி, கீழ்பென்னாத்தூர், வீரம்பாக்கம், தெள்ளார், தேசூர், மங்கலம், மாமண்டூர், கொருக்கை ஆகிய இடங்களில் 3 கோடியே 82 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை மருந்தகக் கட்டடங்கள்;

வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் போளூரில் 1 கோடியே 48 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வணிகவரித் துறை அலுவலகக் கட்டடம்; சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் ஜமுனாமரத்தூரில் 2 கோடியே 91 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சாகச சுற்றுலாத்தளம் கட்டும் பணி;

தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் திருவண்ணாமலை மற்றும்  ஜவ்வாதுமலை ஜமுனாமரத்தூர் ஆகிய இடங்களில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் 7 கோடியே 46 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆயத்த கட்டமைப்பு பணிமனைக் கட்டடங்கள்;

என மொத்தம் 340 கோடியே 21 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 246 புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டினார்.

பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட அரசு நலத்திட்ட உதவிகள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் வீட்டுமனைப் பட்டாக்கள், சாதிச்சான்றுகள், விபத்து நிவாரண நிதி, விதவை உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை, என பல்வேறு திட்டங்களின் மூலம் 18,159 பயனாளிகளுக்கு நிதி உதவிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் பழங்குடியினருக்கான வீடுகள், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், சமத்துவபுரம், கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள், என 75,255 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், என 502 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் கால்நடை வளர்ப்பு மூலதன கடன், மகளிர் குழுக்கடன், சிறுவணிகக்கடன், என 5230 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியினர் பெண்கள் இலவச தையல் இயந்திரம் மற்றும் இலவச சோலார் பவர்பம்பு வழங்குதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மகளிர்க்கு விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்குதல், தாட்கோ சார்பில் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் சுற்றுலா கார் மற்றும் இலகு ரக வாகனங்கள் வழங்குதல், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி; என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 1,71,169 பயனாளிகளுக்கு 693 கோடியே 3 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு  நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.    

இந்த விழாவில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு, மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மு.பெ. கிரி, எஸ். அம்பேத்குமார், தி. சரவணன், திரு.ஓ. ஜோதி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா. முருகேஷ், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com