வெளிநாடு தப்பிச்செல்கிறாரா இலங்கை அதிபர்? வெளியான விடியோ

அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறிய கோத்தபய, வெளிநாட்டுக்குச் தப்பிச்செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாடு தப்பிச்செல்கிறாரா இலங்கை அதிபர்? வெளியான விடியோ
வெளிநாடு தப்பிச்செல்கிறாரா இலங்கை அதிபர்? வெளியான விடியோ


இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி வெடித்திருக்கும் நிலையில், அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறிய கோத்தபய, வெளிநாட்டுக்குச் தப்பிச்செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசுக் கப்பலொன்றில், அவசர அவசரமாக கோத்தபய ராஜபட்சவின் உடமைகள் ஏற்றப்படும் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது. இதன் மூலம், இலங்கையில், ராஜபட்சவின் குடும்ப ஆட்சி முடிவுக்கு வரவிருக்கிறது என்றே கூறப்படுகிறது.

இலங்கையில் மக்கள் புரட்சி ஏற்பட்டு, அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஏராளமான சொகுசுக் கார்களைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இலங்கை என்ற ஒட்டுமொத்த நாடே பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு சிக்கித் தவித்து வரும் நிலையில், ஒரே ஒரு குடும்பம், இப்படி எண்ணற்ற சொகுசுக் கார்களை வாங்கிக் குவித்திருந்தது போராட்டக்கார்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்த போதுதான், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச பதவி விலகினார். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டார். புதிய பிரதமர் நியமிக்கப்பட்ட பிறகும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி சரியாகாத நிலையில், இலங்கை அதிபருக்கு எதிராக இன்று மக்கள் புரட்சி வெடித்துள்ளது. அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறியே கோத்தபய ராஜபட்ச, பத்தரமுல்லையில் உள்ள ராணுவ தலைமையகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நிலையை சீர் செய்யாததால், அதிபர் கோத்தபய ராஜபட்ச, பதவியிலிருந்து விலகக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

அதிபர் மாளிகையில் இருக்கும் நீச்சல் குளங்களில், போராட்டக்காரர்கள் குளிக்கும் காட்சிகளும், அங்கிருக்கும் கார்களை எடுத்து போராட்டக்காரர்கள் ஓட்டும் காட்சிகளும் தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது. அதிபர் கோத்தபயவின் அதிபர் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு கைப்பற்றியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் ஒட்டுமொத்த பகுதிகளிலும் அதிபருக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இலங்கை அதிபர் மாளிகையின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட தடுப்புகளை எல்லாம் தள்ளிவிட்டு, மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்களிடம் இருந்து பாதுகாக்கும் பொருட்டு, அதிபர்  கோத்தபய ராஜபட்சவை ராணுவத்தினர் பாதுகாப்பாக அதிபர் மாளிகையிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.

அதிபர் மாளிகையிலிருந்து தப்பியோடிய கோத்தபய ராஜபட்ச, ராணுவ தலைமையகத்தில் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அவர் வெளிநாட்டுக்குத்தப்பியோடவிருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, அவரது உடமைகள் சொகுசு கப்பலில் ஏற்றப்படுவதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிபர் மாளிகைக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிய நிலையிலும், போராட்டக்காரர்கள் மாளிகைக்குள் நுழைந்துள்ளனர். இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் கிளர்ச்சி எழுந்துள்ளது.  ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை வாயிலில் குவிந்துள்ளனர். போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 33 பேர் காயமடைந்தனர். 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com