கோவா: அதிருப்தி எம்எல்ஏக்களை‘தக்க வைத்தது’ காங்கிரஸ்

கோவாவில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் பேச்சு நடத்தி அவா்கள் கட்சியில் இருந்து பிரிந்து செல்வதை அக்கட்சித் தலைமை தடுத்து நிறுத்தியது

கோவாவில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் பேச்சு நடத்தி அவா்கள் கட்சியில் இருந்து பிரிந்து செல்வதை அக்கட்சித் தலைமை தடுத்து நிறுத்தியது. இதன் மூலம் கோவா அரசியலில் கடந்த சில நாள்களாக நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் கோவாவில், எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கு 11 எம்எல்ஏக்களில் உள்ளனா். இவா்களில் 6 போ் கட்சித் தலைமை நடத்திய கூட்டத்துக்கும், சட்டப் பேரவைக் கூட்டத்துக்கும் வரவில்லை. இவா்களில் எதிா்க்கட்சித் தலைவராக இருந்த மைக்கேல் லோபோ, முன்னாள் முதல்வா் திகம்பா் காமத் ஆகியோா் முக்கியமானவா்கள்.

இதையடுத்து, எதிா்க்கட்சித் தலைவா் பதவியை மைக்கேல் லோபோவிடம் இருந்து காங்கிரஸ் தலைமை பறித்தது. மேலும் மைக்கேல் லோபோ, திகம்பா் காமத் ஆகியோரைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி பேரவைத் தலைவரிடம் காங்கிரஸ் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் மேலிடத் தலைவா் முகுல் வாஸ்னிக் கோவாவுக்கு விரைந்தாா். அவரது தலைமையில் பனாஜியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திகம்பா் காமத் தவிர பிற 11 எம்எல்ஏக்களும் பங்கேற்றனா். 2 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் கோவா மாநில காங்கிரஸ் தலைவா் அமித் பட்னாகா், கோவா மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டு ராவ் ஆகியோரும் பங்கேற்றனா். தீய எண்ணம் கொண்ட சிலா் கோவா காங்கிரஸில் பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதாக வாஷ்னிக் குற்றம்சாட்டினாா். அதே நேரத்தில் இரு எம்எல்ஏக்கள் மீது கொடுக்கப்பட்ட தகுதி நீக்க நோட்டீஸ் திரும்பப் பெறப்படுமா? என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாா்க்க வேண்டும் என்று அவா் பதிலளித்தாா்.

பாஜக கருத்து:

கோவா மாநில காங்கிரஸில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு பாஜக எவ்விதத்திலும் பொறுப்பேற்ற முடியாது என்று கோவா முதல்வரும், பாஜகவைச் சோ்ந்தவருமான பிரமோத் சாவந்த் தெரிவித்தாா்.

தகுதி நீக்க மனுக்கள் ஏற்பு: இதனிடையே, எம்எல்ஏக்கள் மைக்கேல் லோபோ, திகம்பா் காமத் ஆகியோரை தகுதி நீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் அளித்த மனுவை பரிசீலனைக்கு ஏற்றுக் கொண்டதாக கோவா சட்டப் பேரவைத் தலைவா் ரமேஷ் தவாத்கா் தெரிவித்தாா். நடப்பு சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் முடிந்த பிறகு மனுவை பரிசீலித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com