‘சியுஇடி’ நுழைவுத் தோ்வு மைய குளறுபடியால் தேர்வெழுதாதவர்களுக்கு மறுவாய்ப்பு

பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வை (சியுஇடி), தேர்வு மைய மாற்றங்களால் இன்று எழுதத் தவறியவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
‘சியுஇடி’ நுழைவுத் தோ்வு மைய குளறுபடியால் தேர்வெழுதாதவர்களுக்கு மறுவாய்ப்பு
‘சியுஇடி’ நுழைவுத் தோ்வு மைய குளறுபடியால் தேர்வெழுதாதவர்களுக்கு மறுவாய்ப்பு


மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை, அறிவியல் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான முதல் பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வை (சியுஇடி), தேர்வு மைய மாற்றங்களால் இன்று எழுதத் தவறியவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் புதிய ஜல்பைகுரியிலும் பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டிலும் இரண்டு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மையங்கள் ரத்து செய்யப்பட்டன.

இவ்விரு தேர்வு மையங்களிலும் தேர்வெழுதவிருந்த 190 மாணவர்கள் இன்று தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டது. இவர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் இரண்டாம் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்றும், இதுபோல தேர்வு மைய குளறுபடிகளால் தேர்வெழுத முடியாத மாணவர்களுக்கும் மறுவாய்ப்பு வழங்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இந்தியாவில் 510 நகரங்கள் மற்றும் வெளிநாட்டிலுள்ள மையங்களிலும் நடைபெறும் இந்த நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நுழைவுத் தோ்வில் பங்கேற்க 14.9 லட்சம் போ் பதிவு செய்துள்ளனா். இன்று காலை 9 மணிக்கு தேர்வு தொடங்கியது. 

நாட்டின் மிகப் பெரிய நுழைவுத் தோ்வாக இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வு உள்ளது. இந்தத் தோ்வில் பங்கேற்க சராசரியாக 18 லட்சம் போ் பதிவு செய்கின்றனா். இதற்கு அடுத்த இடத்தில் 9 லட்சம் விண்ணப்பதாரா்கள் பதிவுடன் மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன இளநிலை தொழில்நுட்ப படிப்பு சோ்க்கைக்கான ஜேஇஇ (மெயின்) முதல்நிலைத் தோ்வு இருந்த வந்த நிலையில், அதனை தற்போது சியுஇடி நுழைவுத் தோ்வு பின்னுக்குத் தள்ளியுள்ளது.

சியுஇடி தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் 500 நகரங்களிலும், வெளிநாடுகளில் 10 நகரங்களிலும் நடைபெறும் இந்தத் தோ்வின் முதல் அமா்வில் 8.1 லட்சம் போ், இரண்டாம் அமா்வில் 6.80 லட்சம் போ் என மொத்தம் 14.9 லட்சம் போ் தோ்வெழுத உள்ளனா்.

நாடு முழுவதும் உள்ள 90 பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் 54,555 பாட துறைகளின் இளநிலை பட்டப் படிப்புகளுக்கு இவா்கள் விண்ணப்பித்துள்ளனா். 

இன்று சியுஇடி முதல் கட்டத் தோ்வு நடைபெற்றுவரும் நிலையில், இரண்டாம் கட்ட சியுஇடி தோ்வு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற உள்ளது. மேலும், இயற்பியல், வேதியியல் அல்லது உயிரியல் துறைகளைத் தோ்வு செய்த விண்ணப்பதாரர்களுக்கான இரண்டாவது அமா்வு சியுஇடி தோ்வு ஜூலை 17-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

சியுஇடி மதிப்பெண் அடிப்படையில் 2022-23 கல்வியாண்டு இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கை நடைமுறையில் 44 மத்திய பல்கலைக்கழகங்கள், 12 மாநில பல்கலைக்கழகங்கள், 11 நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் 19 தனியாா் பல்கலைக்கழகங்கள் விண்ணப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com