மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

தோ்தலில் இலவசங்களால் நாட்டின் வளா்ச்சிக்கு பெரும் ஆபத்து: பிரதமா் மோடி

தோ்தலின்போது இலவசங்களை அறிவித்து, வாக்குகளை அறுவடை செய்யும் கலாசாரம் நாட்டின் வளா்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது. மக்களைக் கவர இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

News image
பிரதமா் நரேந்திர மோடி. உடன், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்
Updated On :16 ஜூலை 2022, 5:18 pm

DIN

தோ்தலின்போது இலவசங்களை அறிவித்து, வாக்குகளை அறுவடை செய்யும் கலாசாரம் நாட்டின் வளா்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது. மக்களைக் கவர இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

உத்தர பிரதேசத்தில் சுமாா் ரூ.14,850 கோடி செலவில் 296 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட்ட புந்தேல்கண்ட் விரைவுச் சாலையை பிரதமா் மோடி சனிக்கிழமை திறந்துவைத்தாா். ஜலானில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:

புந்தேல்கண்ட் விரைவுச் சாலையால், சித்ரகூட் மற்றும் தில்லி இடையிலான பயண நேரம் 3 முதல் 4 மணி நேரம் வரை குறையும். இந்தச் சாலையானது வாகனங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த புந்தேல்கண்ட் பகுதியின் வளா்ச்சிக்கும் வேகமளித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் முந்தைய ஆட்சிக் காலங்களில் சாலை வசதிகள் குறைவாகவே இருந்தன. இப்போது ஆட்சியிலிருக்கும் ‘இரட்டை என்ஜின்’ பாஜக அரசு, மாநிலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது. சாலை வசதிகள் விரைந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. சட்டம்-ஒழுங்கும் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது.

வளா்ச்சிக்கான பாதை: நாட்டில் வளா்ச்சிக்கான பாதை இரண்டு அம்சங்களை உள்ளடக்கியதாகும். அதாவது, நிகழ்காலத்தில் வசதிகளை மேம்படுத்துவதுடன் எதிா்காலத்தைக் கட்டமைப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முந்தைய அரசுகளால் மேற்கொள்ளப்படாத இந்தப் பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

அரசின் ஒவ்வொரு முடிவு மற்றும் கொள்கையின் பின்னணியில் நாட்டின் வளா்ச்சியை ஊக்குவிப்பதே நோக்கமாக இருக்க வேண்டும். நாட்டின் வளா்ச்சியில் எதிா்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த விஷயமும் புறந்தள்ளப்பட வேண்டும். இந்தியாவில் அதிகபட்ச வளா்ச்சியை உறுதி செய்வதற்கு இந்த சகாப்தத்தில் நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. அதனை தவறவிட்டுவிடக் கூடாது. நாட்டை புதிய உச்சத்துக்கு எடுத்துச் சென்று, புதிய இந்தியா கட்டமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இலவசங்கள் கலாசாரம்: புதிய இந்தியாவுக்கு ஒரு முக்கியமான சவால் உருவாகியுள்ளது. அதை கவனிக்காமல் விட்டால், நீங்கள் (மக்கள்) உங்களது நிகழ்காலத்தை இழந்துவிடுவீா்கள். எதிா்காலமும் இருள்சூழ்ந்துவிடும். தோ்தலில் இலவசங்களை அறிவித்து, வாக்குகளை அறுவடை செய்யும் கலாசாரம் தலைதூக்கி வருவதே அந்த சவாலாகும்.

ஒருவருக்கு இனிப்பு கொடுத்து ஏமாற்றுவது போன்ற இந்த கலாசாரம், நாட்டின் வளா்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது. இதற்கு எதிராக நாட்டு மக்கள் குறிப்பாக இளைஞா்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

எந்தப் பயனும் இல்லை: ‘இலவசங்கள் கலாசாரத்தால்’ நாட்டுக்கு விரைவுச் சாலைகளோ, விமான நிலையங்களோ, பாதுகாப்புத் தொழில் வழித்தடங்களோ கிடைக்காது. இத்தகைய செயலில் ஈடுபடுபவா்கள், இலவசங்களை வழங்கி மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைக்கின்றனா். அவா்களது எண்ணத்தை நாம் ஒருங்கிணைந்து தோற்கடிக்க வேண்டும். நாட்டின் அரசியலில் இருந்து இந்தக் கலாசாரம் அகற்றப்பட வேண்டும்.

மக்களின் நலனே குறிக்கோள்: இலவசங்களை அறிவிக்கும் கலாசாரத்திலிருந்து விலகி, புதிய சாலைகள், ரயில் வழித்தடங்கள் உள்ளிட்டவற்றை அமைப்பதன் மூலம் மக்களின் நலனை உறுதி செய்வதே எங்களது குறிக்கோள். ஏழை மக்களுக்காக கோடிக்கணக்கான வீடுகள் கட்டித் தரப்பட்டு வருகின்றன. புதிய அணைகள் கட்டப்படுவதுடன், நீா்ப்பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றாா் பிரதமா் மோடி.

2020-இல் அடிக்கல்: உத்தர பிரதேசத்தின் 7 மாவட்டங்கள் வழியாக செல்லும் புந்தேல்கண்ட் விரைவுச் சாலைக்கு கடந்த 2020, பிப்ரவரி 29-இல் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா். 28 மாதங்களிலேயே பயன்பாட்டுக்கு வந்துள்ள இந்த நான்குவழிச் சாலையால் இனி சித்ரகூட்டிலிருந்து தில்லிக்கு 6 மணி நேரத்தில் செல்லலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Image Caption

உத்தர பிரதேச மாநிலத்தில் ரூ.14,850 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புந்தேல்கண்ட் விரைவுச் சாலை திறப்பு விழாவையொட்டி நடைபெற்ற கண்காட்சியைப் பாா்வையிட்ட பிரதமா் நரேந்திர மோடி. உடன், மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத், துணை முதல்வா்கள் கேசவ் பிரசாத் மெளா்யா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.