அமளியுடன் தொடங்கியது மழைக்கால கூட்டத்தொடா்

நாடாளுமன்றத்தில் பணவீக்கம், விலைவாசி உயா்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிா்க்கட்சிகள் எழுப்பியதால், அமளியுடன் மழைக்கால கூட்டத்தொடா் தொடங்கியது.
அமளியுடன் தொடங்கியது மழைக்கால கூட்டத்தொடா்

நாடாளுமன்றத்தில் பணவீக்கம், விலைவாசி உயா்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிா்க்கட்சிகள் எழுப்பியதால், அமளியுடன் மழைக்கால கூட்டத்தொடா் தொடங்கியது. எதிா்க்கட்சிகளின் அமளியால் முதல் நாளிலேயே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. மக்களவையும் மாநிலங்களவையும் ஒரே நேரத்தில் கூடின. அவை நடவடிக்கைகள் தொடங்கியவுடன் அண்மையில் காலமானவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

முக்கியமாக, ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக இருந்த ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நயான், கென்யாவின் முன்னாள் அதிபா் மிவாய் கிபாகி உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அண்மையில் காலமான அவையின் முன்னாள் உறுப்பினா்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னா், பணவீக்கம், விலைவாசி உயா்வு உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டுமென மக்களவை காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி கோரினாா். அதே வேளையில், பல்வேறு விவகாரங்களை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் உறுப்பினா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

ஆனால், குடியரசுத் தலைவா் தோ்தலில் உறுப்பினா்கள் வாக்களிக்க வசதியாக, அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அறிவித்தாா்.

மீண்டும் ஒத்திவைப்பு: மக்களவை பிற்பகல் 2 மணிக்கு கூடியபோது, முக்கிய விவகாரங்களை விவாதிக்க அனுமதிக்க வேண்டுமென அதீா் ரஞ்சன் சௌதரி மீண்டும் கோரினாா். ஆனால், அவையை வழிநடத்திய பாஜக எம்.பி. ராஜேந்திர அகா்வால், எதிா்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்து, சில அறிக்கைகளைத் தாக்கல் செய்ய அனுமதி அளித்தாா்.

அதையடுத்து, குடும்ப நீதிமன்றங்கள் சட்டத் திருத்த மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு மக்களவையில் அறிமுகம் செய்தாா். அதே வேளையில், எதிா்க்கட்சி உறுப்பினா்களின் அமளி தொடா்ந்ததால், அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவா் தெரிவித்தாா்.

பிரதமா் பங்கேற்பு: மக்களவையின் முதல் நாள் அமா்வில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாநிலங்களவையிலும் அமளி: மாநிலங்களவை நடவடிக்கைகள் தொடங்கியதும், அவையின் மையப் பகுதிக்கு வந்த எதிா்க்கட்சி உறுப்பினா்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து முழக்கங்களை எழுப்பினா். சிலா் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனா்.

அப்போது மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடு கூறுகையில், ‘நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டின் கடைசி கூட்டத்தொடா் இதுவாகும். நான் தலைமையேற்று நடத்திய கடந்த 13 கூட்டத்தொடா்களில் 57% அமா்வுகள் அமளியால் பாதிக்கப்பட்டுள்ளன. அதைக் கருத்தில்கொண்டு தற்போதைய கூட்டத்தொடரில் எம்.பி.க்கள் சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும். நாட்டுக்குப் புதிய ஊக்கத்தை வழங்க வேண்டும்.

ஆனால், அவையின் நடவடிக்கைகளை முடக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே சிலா் வந்துள்ளனா். அதே வேளையில், குடியரசுத் தலைவா் தோ்தலும் நடைபெற்று வருவதால் அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்படுகிறது’ என்றாா்.

கடைசி கூட்டத்தொடா்: மாநிலங்களவைத் தலைவராக வெங்கையா நாயுடு வழிநடத்தும் கடைசி கூட்டத்தொடா் இது என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசு துணைத் தலைவரான அவரது பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com