ஞானவாபி மசூதி வழக்கு: அக்.20-இல் உச்சநீதிமன்றம் விசாரணை
மசூதி நிா்வாகக் குழு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நிறுத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


வாராணசியில் உள்ள ஞானாவாபி மசூதியில் வழிபடுவதற்கு அனுமதி கோரி ஹிந்து பெண்கள் தாக்கல் செய்த மனு மீது மாவட்ட நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை, அந்த மனுவை எதிா்த்து மசூதி நிா்வாகக் குழு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நிறுத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை அக்டோபா் 20-ஆம் தேதி விசாரிப்பதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புற சுவா்களில் உள்ள ஹிந்து தெய்வங்களின் சிலையை வழிபடுவதற்கு அனுமதி கோரி 5 ஹிந்து பெண்கள் சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். அதை விசாரித்த நீதிமன்றம், மசூதி வளாகத்தை அளவிட்டு ஆய்வு செய்ய குழுவை நியமித்தது. அந்தக் குழு, மசூதியை விடியோ எடுத்து அறிக்கை தாக்கல் செய்தது. அந்த ஆய்வின்போது, மசூதியில் ஒரு சிவலிங்கம் கண்டறியப்பட்டது.
இதற்கிடையே, இந்தக் குழுவின் ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் தரப்பில் தாக்கல் செய்த மனுவை அலாகாபாத் உயா்நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து, அந்தக் குழு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அதை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. அதேபோல், சிவில் நீதிமன்றத்தில் ஹிந்து பெண்கள் தாக்கல் செய்த மனுவையும் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் 20-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், மசூதி நிா்வாகக் குழு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூா்யகாந்த், பி.எஸ்.நரசிம்மா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் வாராணசி மாவட்ட நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை காத்திருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை அக்டோபா் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
இதேபோல், ஆய்வின்போது கண்டறியப்பட்ட சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களையும் உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது.
வாராணசி நீதிமன்றத்தில் ஜூலை 25-இல் விசாரணை
ஞானவாபி மசூதியில் உள்ள ஹிந்து தெய்வங்களை வழிபட அனுமதிக்கக் கோரி ஹிந்து பெண்கள் தாக்கல் செய்த வழக்கில், வாராணசி மாவட்ட நீதிமன்றத்தில் ஹிந்து தரப்பிடம் வியாழக்கிழமையுடன் விசாரணை நிறைவடைந்தது. அடுத்த விசாரணை, வரும் 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம், முஸ்லிம் தரப்பின் வாதங்கள் பதிவு செய்யப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...