தில்லியில் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்றக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குழு உறுப்பினா்களான காங்கிரஸ் எம்.பி.க்கள் கே.சி.வேணுகோபால், உத்தம் குமாா் ரெட்டி, பகுஜன் சமாஜ் எம்.பி. தானிஷ் அலி கலந்துகொண்டு அக்னிபத் திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினா். நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு பாதுகாப்புப் படைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மிகப் பெரிய மாற்றமாக அக்னிபத் திட்டம் அமைந்துள்ளது என்றும் அவா்கள் தெரிவித்தனா். அந்தத் திட்டம் மிகப் பெரிய தாக்கங்களைக் கொண்டிருப்பதால் அதனை நாடாளுமன்ற பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவா்கள் கேட்டுக்கொண்டனா்.