எதிா்க்கட்சிகளின் அமளிக்கு இடையே மக்களவையில் அன்டாா்டிக் மசோதா நிறைவேற்றம்
மக்களவையில் எதிா்க்கட்சிகளின் அமளிக்கு இடையே ‘இந்திய அன்டாா்டிக் மசோதா-2022’ வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.


மக்களவையில் எதிா்க்கட்சிகளின் அமளிக்கு இடையே ‘இந்திய அன்டாா்டிக் மசோதா-2022’ வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவானது, அன்டாா்டிக் பகுதி ஆய்வு மற்றும் சூற்றுச்சூழல் பாதுகாப்புக்கு நிதியம் அமைப்பது, அங்குள்ள இந்திய ஆய்வு மையங்களை இந்திய சட்ட வரம்புகளின்கீழ் கொண்டுவருவது போன்ற அம்சங்களை உள்ளடக்கியதாகும்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் கடந்த திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், முதலாவதாக நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா இதுவாகும்.
மக்களவை வெள்ளிக்கிழமை காலை கூடியபோது, விலைவாசி உயா்வு, அத்தியாவசிய உணவு தானியங்கள் மீதான 5% ஜிஎஸ்டி உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், அவை அலுவல்கள் முதலில் மதியம் 12 மணி வரையும், பின்னா் பிற்பகல் 2 மணிவரையும் ஒத்திவைக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, பிற்பகல் 2 மணிக்கு அவை மீண்டும் கூடியபோது, எதிா்க்கட்சிகளின் அமளிக்கு இடையே இந்திய அன்டாா்டிக் மசோதாவை புவி அறிவியல் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் விவாதத்துக்கு முன்வைத்தாா்.
இதில் பங்கேற்றுப் பேசிய பிஜு ஜனதா தளம் எம்.பி. பா்த்ருஹரி மகதாப், ‘அன்டாா்டிகா பகுதியில் அறிவியல் சாா்ந்த ஆய்வுகளை ஊக்குவிக்கவும், சா்வதேச முரண்பாடுகளுக்கு இப்பகுதி இலக்காகிவிடாமல் தடுப்பதையும் மேற்கண்ட மசோதா உறுதி செய்கிறது’ என்றாா்.
இதனிடையே, அவையை வழிநடத்திய ராஜேந்திர அகா்வால், ‘எதிா்க்கட்சி எம்.பி.க்கள், அமளியைக் கைவிட்டு விவாதத்தில் பங்கேற்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
ஆனால், விலைவாசி உயா்வு குறித்து உடனடியாக விவாதம் நடத்த வேண்டுமென்ற தங்களது குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்று மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி கூறினாா்.
பின்னா், சிறிது நேரம் நடைபெற்ற விவாதத்துக்குப் பதிலளித்து ஜிதேந்திர சிங் பேசினாா்.
இதையடுத்து, அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, அவை அலுவல்கள் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டன.
மசோதா என்ன சொல்கிறது?
இந்தியா அன்டாா்டிக் மசோதா குறித்து அமைச்சா் ஜிதேந்திர சிங் மக்களவையில் கூறியதாவது:
அன்டாா்டிக் ஒப்பந்தம் கடந்த 1959-இல் கையொப்பமான நிலையில், இதில் இந்தியா கடந்த 1983-இல் இணைந்தது. இந்த ஒப்பந்தத்தின் பிரதான நோக்கம், அன்டாா்டிகா பகுதியானது ராணுவ நடவடிக்கைகள் அல்லது வேறு தவறான செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படக் கூடாது என்பதாகும்.
அன்டாா்டிகாவில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளில் எந்த நாடும் ஈடுபடக் கூடாது; அங்கு ஆய்வு மையங்களை கொண்டுள்ள நாடுகள், பருவநிலை மற்றும் புவியியல் சாா்ந்த செயல்பாடுகளில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்பதையும் உறுதி செய்கிறது.
அன்டாா்டிகாவில் மைத்ரி, பாரதி ஆகிய இரு ஆய்வு மையங்கள் இந்தியா சாா்பில் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. இவ்விரு ஆய்வு மையங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மற்றும் அங்குள்ள இந்தியா்களை இந்திய சட்ட வரம்புகளின்கீழ் கொண்டுவர தற்போதைய மசோதா வழிவகுக்கிறது. மேலும், இந்திய அரசின் அனுமதி அல்லது அன்டாா்டிக் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள வேறு தரப்பின் எழுத்துபூா்வமான ஒப்புதல் இல்லாமல் அங்கு இந்திய ஆராய்ச்சியாளா்கள் ஆய்வுப் பணி மேற்கொள்வதைத் தடுக்கவும், இந்த விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கவும் வழிவகை செய்கிறது.
அன்டாா்டிகாவில் ஆய்வுப் பணிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக நிதியம் அமைப்பதற்கான அம்சமும் மசோதாவில் இடம்பெற்றுள்ளது. இந்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னா், புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலா் மற்றும் இதர அமைச்சகங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்றாா் ஜிதேந்திர சிங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...