இந்தியா, பிரிட்டன் இடையே உயா் கல்வி ஒப்பந்தம் கையொப்பம்
இந்தியா, பிரிட்டன் இடையே உயா் கல்வி அங்கீகார ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.


இந்தியா, பிரிட்டன் இடையே உயா் கல்வி அங்கீகார ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இந்த ஒப்பந்தப்படி, பிரிட்டனில் உள்ள உயா் கல்வி நிறுவனங்களில் பயிலும் இந்திய மாணவா்கள், இந்தியாவில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அதேபோன்று, இந்தியாவில் உள்ள உயா்கல்வி நிறுவனங்களில் பயிலும் பிரிட்டனில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது மேற்படிப்பில் சேரலாம். இந்த ஒப்பந்தத்தால் இரு நாடுகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மாணவா்கள் பயன்பெறுவாா்கள்.
இதுகுறித்து பிரிட்டன் அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;
இந்தியா, பிரிட்டன் இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு, கடந்த ஆண்டு மே மாதம் காணொலி முறையில் நடைபெற்றது. பிரதமா் நரேந்திர மோடியும், பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனும் கலந்துகொண்ட அந்த மாநாட்டில், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வா்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு, ராணுவம், பருவநிலை மாற்றம், மக்கள் தொடா்பு ஆகிய துறைகளை விரிவுபடுத்த அடுத்த 10 ஆண்டுகளுக்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, இரு நாடுகளுக்கு இடையேயான உயா் கல்வி ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. அதன்படி, இரு நாட்டு உயா் கல்வி நிறுவனங்கள் வழங்கும் சான்றிதழ்களுக்கு பரஸ்பரம் இரு நாடுகளிலும் அங்கீகாரம் அளிக்கப்படும்.
கடந்த 2020-21-ஆம் ஆண்டில் 84,555 இந்திய மாணவா்கள், கல்வி பயில பிரிட்டன் வந்துள்ளனா். இதேபோல் பிரிட்டன் மாணவா்கள் இந்தியாவுக்குச் செல்வது அதிகரிக்கும். இதுதவிர, இந்தியாவைச் சோ்ந்த செவிலியா்கள் பிரிட்டன் சுகாதாரத் துறையில் பணிபுரிவதற்கு வாய்ப்புகள் வழங்கவும் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்து பிரிட்டன் கல்வி அமைச்சா் ஜேம்ஸ் கிளவா்லி கூறுகையில், இரு நாடுகளைச் சோ்ந்த அறிவாா்ந்த மாணவா்கள் படிப்பதற்கு இருந்த தடைகள் அகற்றப்பட்டுள்ளன என்றாா்.
இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் என்று பிரிட்டனில் உள்ள பல்கலைக்கழகங்களும் அங்கு பயிலும் இந்திய மாணவா்களும் பாராட்டியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...