மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

அஸ்ஸாம் தேர்தல்: மாநில கட்சிகள் மீது சவாரி செய்யும் தேசிய கட்சிகள்!

அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல் பற்றி..

News image

கௌரவ் கோகோய் - ஹிமந்த பிஸ்வ சர்மா

dps

Updated On :24 மார்ச் 2026, 8:10 am

Syndication

ம.ஆ. பரணிதரன்

அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவை, மீண்டும் ஒரு கடும் போட்டி நிறைந்த தேர்தல் களத்துக்கு ஆயத்தமாகி வருகிறது. வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி அங்குள்ள 126 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் காய்களை நகர்த்தி வருகிறார். அங்கு 2021-இல் நடந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.

முந்தைய தேர்தலில், முஸ்லிம் சிறுபான்மையினர் ஆதரவை பெருமளவில் பெற்றுள்ள பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்), 16 இடங்களைக் கைப்பற்றியது. 2021-இல் காங்கிரஸ் தலைமையிலான மகாஜோத் கூட்டணியில் இருந்து இந்த கட்சி வெளியேறியது. வரும் தேர்தலில் மாற்றுக்கூட்டணியாக களம் காண்கிறது.

சமீபத்திய தேர்தல் உடன்பாட்டின்படி பேரவையில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 89 இடங்களிலும், அசோம் கண பரிஷத் (ஏஜிபி) 26, போடோலாந்து மக்கள் முன்னணி (பிபிஎஃப்) 11 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதன் கூட்டணியில் இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி சித்தாந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக வெளியேறி தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளது.

ஆறு கட்சிகள் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டணியில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஐஎம்), கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), அஸ்ஸாம் ஜாதிய பரிஷத் (ஏஜேபி), அனைத்து மலைவாழ் தலைவர்கள் மாநாடு (ஏபிஎச்எல்சி), ரைஜோர் தளம் ஆகியவை உள்ளன.

மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லாவிட்டால் தங்களின் உயரத்தை உலகுக்குக் காட்ட முடியாது என்பதை பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளும் நன்றாக உணர்ந்துள்ளன. எனவே, அவற்றை விட்டுக் கொடுக்காமல் அரவணைக்கும் உத்திகளை இரு தேசிய கட்சிகளுமே கையாண்டு வருகின்றன. இந்த கூட்டணி கட்சிகளின் பலம், பலவீனங்கள் குறித்துப் பார்க்கலாம்.

அஸ்ஸாம் கண பரிஷத் (ஏஜிபி): ஏஜிபியின் மிகப்பெரிய பலமாக, அது தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருப்பதையும், மாநில அமைச்சரவையில் மூன்று உறுப்பினர்களைக் கொண்டிருப்பதையும் குறிப்பிடலாம்.

பிராந்திய வாதத்தை தனது மையக் கொள்கையாகக் கொண்ட இக்கட்சி, அஸ்ஸôமிய வாக்காளர்களைத் ஈர்க்கும் வகையில் மாநிலமே பிரதானம் என்ற கொள்கையையே முன்னிலைப்படுத்தி வருகிறது. ஆனால், அதிருப்தி தலைவர்கள், வாய்ப்பு கிடைக்காமல் அணி மாற முற்படுவது களத்தில் இதன் வெற்றியைப் பாதிக்கலாம் எனக் கருதப்படுகிறது.

போடோலாந்து மக்கள் முன்னணி (பிபிஎஃப்): கடந்த ஆண்டு நடைபெற்ற போடோலாந்து பிராந்திய கவுன்சில் (பிடிசி) தேர்தலில் பெற்ற வெற்றியே பிபிஎஃப் கட்சிக்கு முதன்மை பலமாகும். கோக்ராஜார், சிரங், பக்ஸô, உதல்குரி, தமுல்பூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பிராந்தியத்தில் உள்ள 15 தொகுதிகளிலும் இக்கட்சிக்கு சாதகமான சூழல் நிலவுகிறது.

2016 பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருந்த பிபிஎஃப், 13 தொகுதிகளில் போட்டியிட்டு 12}இல் வென்றது. ஆனால், பின்னர் எதிர்க்கட்சியான "மகாஜோத்' கூட்டணியில் இணைந்து, 2021}இல் மூன்று தொகுதிகளை சிரமப்பட்டு வென்றது.

கடந்த ஆண்டு நடைபெற்ற போடோலாந்து பிராந்திய கவுன்சில் தேர்தல்களுக்குப் பிறகு மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருப்பதும், கூட்டணிக் கட்சிகளுடன் செய்து கொண்ட தொகுதி பங்கீட்டு ஏற்பாடுகளும் பிபிஎஃப்}க்கு சாதகமான முடிவைத் தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரைஜோர் தளம்: மேலடுக்கு அஸ்ஸாமின் குறிப்பிட்ட சில தொகுதிகளில் மக்கள் ஆதரவு "ரைஜோர் தளம்' கட்சிக்கு இருப்பது அதன் முக்கியப் பலமாகும். 2019, டிசம்பரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களின்போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் இருந்தபோதே, 2021 சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சியின் தலைவர் அகில் கோகோய், சிவசாகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் அணியில் 11 தொகுதிகளில் இக்கட்சி போட்டியிடுகிறது. மேலும், இரு தொகுதிகளில் காங்கிஸýம் ரைஜோர் தளமும் பரஸ்பரம் வேட் பாளர்களை நிறுத்துகின்றன. காங்கிரஸ் அணியில் அஸ்ஸôம் ஜாதிய பரிஷத் 10 தொகுதிகளில் போட்டியிட உடன்பாட் டை எட்டியுள்ளது.

ஏஐயுடிஎஃப்: "மகாஜோத்' கூட்டணியின் ஓர் அங்கமாக, 2021 பேரவைத்தேர்தல்களில் 16 தொகுதிகளை வென்ற ஏஐயுடிஎஃப் கட்சி, காங்கிரஸýக்குப் பிறகு இரண்டாவது முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகளில் இக்கட்சிக்கு உள்ள வலுவான அடித்தளமே அதன் முக்கியப் பலமாகும்.

தற்போது எந்தவொரு கூட்டணியிலும் ஏஐயுடிஎஃப் இல்லை. வங்காளி முஸ்லிம்களைத் தனது வாக்கு வங்கியாகக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியிலிருந்து அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள விலகல்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள ஏஐயுடிஎஃப் களத்தில் முயன்று வருகிறது.

அஸ்ஸாம் மாநிலத்தின் பல்வேறு இனம் மற்றும் மொழி சார்ந்த பிராந்தியங்கள் அனைத்திலும் செல்வாக்கு செலுத்தும் வடகிழக்கு மாநிலத் தலைவர்களில் ஒருவராக முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா திகழ்கிறார். அவர் முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்த அனுபவம், எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கிகள் மற்றும் அரசியல் கட்டமைப்புகள் குறித்த ஆழமான புரிதலை அவருக்கு வழங்கியிருக்கிறது. இது வெற்றி வியூகத்தை வகுக்க பாஜகவினருக்கு பெரிதும் உதவக் கூடும்.

சிக்கல்: மாநில காங்கிரஸ் தலைவர் கெüரவ் கோகோய் போன்றவர்களின் உதவியுடன் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கும் முயற்சிகளை காங்கிரஸ் தொடங்கியுள்ளது. அது தீவிரமடையும்போது, சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குகள் பாஜகவுக்கு எதிராகத் திரளக் கூடும். இத்தகைய சிக்கல்களுக்கு மத்தியில் அஸ்ஸாமின் எதிர்காலத்தை எந்த மாநில கட்சிகள் அங்கம் வகிக்கும் கூட்டணி வெல்லப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Summary

The Assam Legislative Assembly is gearing up once again for a fiercely contested electoral battle.