அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி வெற்றிக்கு முக்கிய காரணியாகத் தொகுதி மறுவரையறை அமைந்ததாகக் கருத்துகள் தெரிவிக்கின்றன.
126 உறுப்பினர்களைக் கொண்ட அஸ்ஸாம் பேரவையில் 102 இடங்களைப் பெற்று சாதனை வெற்றியைப் பதிவு செய்தது பாஜக-என்டிஏ கூட்டணி. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், சிறுபான்மை வேட்பாளர்களுக்குப் பலமாக இருந்த தொகுதிகளில் அவர்களின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறையாகும்.
2023-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறைப் பணியானது, தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைத்துச் சீரமைத்தது. இதில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த சில தொகுதிகள் பழங்குடிச் சமூகத்தினருக்குக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டன. சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்களைப் பெற இந்தத் தொகுதி மறுவரையறை முக்கிய பங்காற்றியது.
முந்தைய அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் 35 தொகுதிகளில், குறிப்பாகக் காங்கிரஸ் மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி(ஏஐயுடிஎஃப்) கட்சிகளுக்குச் சிறுபான்மையினரின் வாக்குவங்கி முக்கிய பங்கு வகித்தது. ஆனால், தொகுதி மறுவரையறையின் காரணமாக அந்த வாக்கு வங்கியின் தாக்கம் 25 தொகுதிகளாகக் குறைந்தது.
தொகுதி மறுசீரமைப்பால் பெரிதும் பாதிக்கப்படாத தொகுதிகளில், எதிர்க்கட்சிகள் வென்ற 24 இடங்களில் 22 இடங்கள் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே கிடைத்துள்ளன. அதேவேளையில், காங்கிரஸ் மற்றும் ஏஐயுடிஎஃப் ஆகிய இரு கட்சிகளும் தங்களின் முந்தைய செல்வாக்கில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.
இந்த மறுசீரமைப்பு, முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதிகள் சிதைவடைவதற்கு வழிவகுத்ததுடன், அவை பழங்குடியின சமூகம் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளுடன் இணைந்ததால் வாக்கு வங்கி குறையும் நிலை ஏற்பட்டது.
தொகுதி மறுவரையறைப் பணியானது சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 126-ஆகவே தக்கவைத்துக்கொண்டது. அதேவேளையில், பழங்குடியினர் மற்றும் பட்டியல் இனத்தவருக்கான தொகுதிகளைக் கூடுதலாக ஒதுக்கியது. இதில் பழங்குடியினருக்கான தொகுதிகள் 16-லிருந்து 19-ஆகவும், பட்டியல் இனத்தவருக்கான தொகுதிகள் 8-லிருந்து 9 ஆகவும் அதிகரிக்கப்பட்டன.
பெங்காலி மொழி பேசும் முஸ்லிம்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கும் தொகுதிகளான பர்பேட்டா, கோல்பாரா (மேற்கு) ஆகியவை முறையே பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. இவ்விரு தொகுதிகளையும் என்டிஏ கூட்டணியானது காங்கிரஸ் கட்சியிடமிருந்து கைப்பற்றியது.
போடோலாந்து பிராந்தியத்தில் உள்ள பிற பழங்குடியினர் ஒதுக்கீடுத் தொகுதிகளிலும் தொகுதி மறுவரையறையின் தாக்கம் தெளிவாகத் தெரிந்தது. அந்த பிராந்தியத்தில் பழங்குடியினருக்கான ஒதுக்கீடுத் தொகுதிகளின் எண்ணிக்கை 11-லிருந்து 15-ஆக உயர்த்தப்பட்டது. என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் போடோலாந்து மக்கள் முன்னணி கட்சி இந்த 15 தொகுதிகளில் 10-ஐக் கைப்பற்றியது. அதேவேளையில் அக்கட்சியின் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளர் தேர்தலில் தோல்வியடைந்தார்.
தொகுதி மறுவரையறையால் காங்கிரஸ் மற்றும் ஏஐயுடிஎஃப் ஆகிய இரு கட்சிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்விரு கட்சிகளின் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் பெரும்பாலானோர் 25 தொகுதிகளுக்குள்ளேயே முடங்கிப்போயினர். இதில் பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட நவோய்ச்சா தொகுதியிலிருந்து ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே தேர்தல் வெற்றி பெற்றார்.
கடந்த தேர்தலில் 16 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஏஐயுடிஎஃப் கட்சி இம்முறை வெறும் இரண்டு இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. அதேவேளையில், இந்த 25 தொகுதிகளுக்குள் ராய்ஜோர் தள் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு வேட்பாளரும் வெற்றி பெற்றனர்.
பெங்காலி மொழி பேசும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 25 தொகுதிகளில் போதிய செல்வாக்கு இல்லாத ஆளும் கூட்டணி, அப்பிராந்தியக் கட்சியான அஸ்ஸாம் கன பரிஷத் வாயிலாக அத்தொகுதிகளில் கால்பதிக்க முயன்றது. இம்முயற்சியின் ஒரு பகுதியாக, அந்த சமூகத்தைச் சேர்ந்த 13 பேருக்குப் போட்டியிட வாய்ப்பளித்தது. இருப்பினும், தொகுதி மறுவரையறைக்குப் பிறகு அக்கட்சியில் இணைந்திருந்த சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் உள்பட, எவராலும் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற இயலவில்லை.
பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக் கட்சிகள், பெரும்பான்மையான இடஒதுக்கீடு தொகுதிகள் தங்கள் வசமே இருப்பதை உறுதி செய்தன.
அடையாள அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் அதேவேளையில், இப்பகுதிகளில் நடைமுறையில் எந்தச் செல்வாக்கும் இல்லாத பாஜக, முஸ்லிம்களுக்குப் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை.
தொகுதி மறுவரையறை காரணமாகப் புதிய தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளதால், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பலமுறை திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 2023-இல் இந்தச் செயல்முறை மேற்கொள்ளப்பட்டது. மறுவரையறை செய்யப்பட்ட எல்லைகளின் கீழ் நடைபெற்ற முதல் தேர்தல் கடந்த மக்களவைத் தேர்தலாகும். அதேவேளையில் இதுவே முதலாவது சட்டப்பேரவைத் தேர்தலும் கூட.
பாஜக 82 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சிகளான போடோலாந்து மக்கள் முன்னணி மற்றும் அஸ்ஸாம் கன பரிஷத் ஆகியவை தலா 10 தொகுதிகளைக் கைப்பற்றின. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 19 தொகுதிகளையும், ராய்ஜோர் தள் மற்றும் ஏஐயுடிஎஃப் கட்சிகள் தலா இரண்டு தொகுதிகளையும், திரிணமூல் காங்கிரஸ் ஒரு தொகுதியையும் கைப்பற்றின.
Summary
The delimitation of constituencies to reduce the impact of minority candidates in their earlier strongholds is one among the many factors that led to the NDA's stupendous performance in the Assam polls, securing a record win of 102 seats in the 126-member assembly.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஸ்ஸாமில் 17 தொகுதியில் பாஜக முன்னிலை!

அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல்! 3 மணிக்குள் 76% வாக்குப்பதிவு!

அஸ்ஸாம் தேர்தல்: மாநில கட்சிகள் மீது சவாரி செய்யும் தேசிய கட்சிகள்!

சமூக சிக்கல்களுக்குள் சுழலும் அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல்!
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு



