3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

117! பேரவையில் பெரும்பான்மைக்கு என்ன செய்யப் போகிறார் விஜய்?

தமிழக பேரவையில் 117 என்ற பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய் என்பது பற்றி..

News image

தவெக தலைவர் விஜய் - ENS

Updated On :5 மே 2026, 0:15 pm IST

கடந்த 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தை உருவாக்கிய விஜய், 2026 தேர்தலில் போட்டியிட்டு 234 உறுப்பினர்களைக் கொண்ட பேரவையில் 108 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. ஆனால, பெரும்பான்மைக்கான 118 என்ற பலத்தை பெறத் தவறிவிட்டது.

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், தவெகவினர் உள்பட அனைவருக்குமே சற்று ஆச்சரியமும், சிலருக்கு கடுமையான அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. நடிகராக இருந்து கட்சியைத் தொடங்கிய விஜய்யின் தவெக மாநிலத்தில், தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தமிழகத்தை ஆண்ட திமுக கூட்டணி 73 தொகுதிகளுடனும், அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இவர்களைத் தவிர, வேறு எந்த ஒரு கட்சியும் சுயேச்சையும் வெற்றி பெறவில்லை.

தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, பெரும்பான்மை பெறவில்லை. 108 உறுப்பினர்களில், விஜய் ஒரு உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வார். மற்றொரு உறுப்பினர் அவைத் தலைவராக மாறுவார். பிறகு, இவர்களது மொத்த பலம் 106 ஆகக் குறையக் கூடும். பேரவையின் மொத்த உறுப்பினர் பலத்துக்கு ஏற்ப எப்படிப்பார்த்தாலும் இன்னமும் தவெகவுக்கு 11 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது. திமுக மற்றும் அதிமுக அல்லாத ஒருவர் தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியில் அமரவிருக்கிறார். அது எப்படி சாத்தியமாகும்.

ஒரு வாய்ப்பு.. திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட சிறு கட்சிகளின் ஆதரவை விஜய் கோரலாம். ஏற்கனவே, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு முக்கிய முடிவெடுக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடங்கர் நேற்றே கூறியிருந்தார். ஏற்கனவே ஆட்சியில் அதிகாரம் என்ற குரலின் மூலம் திமுகவுடன் மோதல் போக்கில் இருந்த காங்கிரஸ் கட்சி வசம் தற்போது 5 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தவெகவுக்கு செல்வதில் பெரிய தடையோ, சங்கடமோ, சிக்கல்களோ இருக்காது என்றே தெரிகிறது. திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்திக்க கூட்டணிக் கட்சித்தலைவர்கள் வந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் யாரும் வரவில்லை என்பதும் இதற்கான அறிகுறியாகவே உள்ளது.

இதனுடன், திமுக கூட்டணியில் போட்டியிட்ட இடதுசாரிக் கட்சிகளுக்கு தலா இரண்டு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களும் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது. இதனுடன் சேர்த்தால் 9 பேரின் ஆதரவு கிடைத்துவிடும். கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு பேரின் ஆதரவு மட்டுமே தேவைப்படும்.

இதற்கு இன்று காலையில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுவரை இடதுசாரிகள் உடன் இணைந்தே பயணித்திருக்கிறோம். ஒன்றாகப் பேசி முடிவு செய்வோம் என்று கூறியதிலிருந்து, இடதுசாரிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தால் விசிகவும் உடன் செல்ல வாய்ப்பிருக்கிறது. விசிகவும் ஆதரவு தெரிவித்துவிட்டாலே தவெகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துவிடும் என்று நம்பப்படுகிறது. விசிக இல்லாவிட்டால் தேமுதிகவின் ஒரே ஒரு உறுப்பினர் பிரேமலதாவின் ஆதரவையும் விஜய் கோரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு திமுக கூட்டணிக் கட்சிகளிடம் விஜய் ஆதரவு கோராமலும், ஏற்கனவே சில கட்சித் தலைவர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கத் தயாராகிவிட்டதாகவே கூறப்படுகிறது.

எனவே, இந்த வாய்ப்பு தவெகவுக்கு மிகப்பெரிய பலமாகவும் மாறும். அரசியலில் ஆளுமை மிக்கவர்களின் ஆதரவுடன் விஜய் ஆட்சியமைக்கவும் இவர்களுக்கு அமைச்சரவையில் இடம்கொடுத்தால், ஏற்கனவே ஆட்சியில் பங்கு என்ற இவர்களது கேட்கப்படாத பல விருப்பங்களும் நிறைவேறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு வாய்ப்பு- தவெக தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க அதிமுகவின் ஆதரவை கோருவது. ஏற்கனவே விஜய் பாஜகவை கடுமையாக விமரிசித்து வருவதால், பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுகவை எப்படி ஆதரவு அளிக்க கோருவார் என்று சற்றுத் தயங்கினாலும், எடப்பாடி பழனிசாமி தன்னுடைய கூட்டணியில் இருக்கும் பாஜகவை ஓரங்கட்டிவிட்டு, உடனடியாக தவெகவுக்கு ஆதரவு அளிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிமுக ஆதரவு அளிக்கவில்லை, அதிமுகவின் ஒட்டுமொத்த ஆதரவு, ஆட்சியில் சங்கடத்தை ஏற்படுத்தும் என கருதினால், அதிமுகவில் சற்று அதிருப்தியில் இருக்கும் 33 சதவிகித எம்எல்ஏக்களை மட்டும்கூட தவெக அழைத்துக் கொள்ளலாம். (இதெல்லாம் ஒரு கணிப்புகள்தான். உறுதியான தகவல்கள் இல்லை) தேர்தலின்போது ஒரு பொருட்டே இல்லை என அதிமுகவை விமர்சித்துவிட்டு இன்று அதனுடன் கூட்டணி சேர்ந்தாலும் அது பேசுபொருளாகக்கூடும்.

இவ்விரு வாய்ப்புகளைத் தாண்டினால், அதிமுகவை விட்டுவிட்டு, அதன் கூட்டணியில் இருக்கும் பாமக (4 உறுப்பினர்கள்), அமமுகவின் 1 உறுப்பினர் ஆதரவை மட்டும் பெற்று தவெகவால் ஆட்சியமைக்க முடியாது. எனவே இரண்டு கூட்டணிகளிலிருந்தும் தனக்கு சாதகமான கட்சிகளை மட்டும் அழைப்பாரா விஜய் என்பதும் தெரியவில்லை.

எனவே, விஜய்யின் தேர்தல் கணக்கு வென்று 108 என்ற நிலையில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் ஆட்சிக் கணக்கு என்னவாகும், அவர் எப்படிக் கூட்டிக் கழித்து ஆட்சியைப் பிடிக்கப்போகிறார் என்பதே பலரது கேள்வியாக எதிர்பார்ப்பாக உள்ளது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

Summary

About what Vijay is going to do to get a majority in the Tamil Nadu Assembly

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.