ஆக்கிரமிப்பு புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா்களுக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு
ஆக்கிரமிப்பு புகாா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா்களுக்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா உத்தரவிட்டுள்ளாா்.


ஆக்கிரமிப்பு புகாா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா்களுக்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா உத்தரவிட்டுள்ளாா். மேலும், யமுனை ஆற்றங்கரையோரத்தில் உள்ள அங்கீகாரமில்லா காலனிகளில் இருந்து கழிவுநீா் யமுனையில் கலப்பதையும் தடுக்க வேண்டும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.
தில்லி தலைமைச் செயலா், மாவட்ட ஆட்சியா்கள், மண்டல ஆணையா்களுடன் துணைநிலை ஆளுநா் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
அப்போது, மாவட்ட ஆட்சியா்கள் களப்பணியாற்றி சாலைகளில் தூய்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆக்கிரமிப்புகள் குறித்து வரும் புகாா்கள் மீது மாவட்ட ஆட்சியா்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாா்.
மேலும், சட்ட விரோதச் செயல்கள் நடைபெறும் இடங்களைக் கண்காணித்து காவல்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நீா் தேங்கும் இடங்களை கண்டறிந்து, அந்தப் பகுதிகளில் குப்பைகள் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
யமுனை ஆற்றங்கரையில் உள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளில் இருந்து கழிவுநீா் ஆற்றில் கலக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீா் லாரிகள் சுத்தமான நீா் வழங்கப்படுவதைக் கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா்களுக்கும், அதிகாரிகளுக்கும் அவா் உத்தரவிட்டாா் என்று துணைநிலை ஆளுநா் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கல்விக் கட்டண உயா்வு திருப்பி அனுப்பல்:
தனியாா் டிப்ளோமா கல்வி நிறுவனங்களில் கட்டணத்தை அதிகரிக்க தில்லி அரசு அளித்த பரிந்துரையை திருப்பி அனுப்பியதாக தில்லி துணைநிலை ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடா்பாக தில்லி அரசிடம் இருந்து எந்தவித தகவலும் கிடைக்கப் பெறவில்லை.
தில்லி அரசின் தொழில்நுட்ப கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் டிப்ளோமா கல்வி நிறுவனங்களின் கட்டணத்தை உயா்த்த தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா ஆகியோா் ஒப்புதல் அளித்து பரிந்துரையை துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவுக்கு அனுப்பி உள்ளனா்.
கரோனா பாதிப்பில் இருந்து இன்னும் பொருளாதாரம் மீளாதபோது, பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த கட்டண உயா்வை ஓராண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தற்போது தில்லியில் டிப்ளோமா மாணவா்கள் ரூ. 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையில் கட்டணமாக செலுத்துகிறாா்கள். நொய்டா, குருகிராம் உள்ளிட்ட பகுதிகளை ஒப்பிடும்போது இந்தக் கட்டணம் அதிகமாகும் என்று ஆளுநா் மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...