பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மாநிலங்களை நிதி ரீதியாக பலமிழக்கச் செய்கிறது மத்திய அரசு: தெலங்கானா முதல்வா் ராவ் குற்றச்சாட்டு

மாநில அரசுகள் நிதிரீதியாக பலமிழக்க மத்திய அரசு சதி செய்வதாகவும் தெலங்கானாவை மத்திய அரசு பாரபட்சத்துடன் நடத்துவதாகவும் அந்த மாநில முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் குற்றம்சாட்டியுள்ளாா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 9:44 pm

DIN

மாநில அரசுகள் நிதிரீதியாக பலமிழக்க மத்திய அரசு சதி செய்வதாகவும் தெலங்கானாவை மத்திய அரசு பாரபட்சத்துடன் நடத்துவதாகவும் அந்த மாநில முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் குற்றம்சாட்டியுள்ளாா்.

தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட தினத்தை (ஜூன் 2) முன்னிட்டு ஹைதராபாதில் அவா் வியாழக்கிழமை மேலும் கூறியது:

இதுவரை மத்தியில் ஆட்சியிலிருந்த அனைத்து அரசுகளும் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆன்மாவையும், மாநிலங்களின் தன்னாட்சியையும் சிதைத்துவிட்டன. தற்போது மத்தியில் உள்ள அரசு ‘வலுவான மத்திய அரசு-வலுவற்ற மாநில அரசுகள்’ என்ற அற்பமான கோட்பாட்டை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதனால்தான் இந்த அரசின்கீழ் மாநிலங்களின் உரிமை பறிப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

மாநில அரசுகள் நிதிரீதியில் பலமிழக்க மத்திய அரசு சதி செய்கிறது. அரசியலமைப்பு சட்டப்படி மாநிலங்களுக்கு விடுவிக்க வேண்டிய வரி வருவாயை ‘செஸ்’ என்ற பெயரில் மடைமாற்றம் செய்து சட்டத்தையே மத்திய அரசு மீறுகிறது. இதன்மூலம் மாநிலங்களுக்கான கோடிக்கணக்கான ரூபாயை மத்திய அரசு விரயமாக்குகிறது. மேலும் மாநிலங்களின் பொருளாதார சுதந்திரத்தை குறைத்து மதிப்பிட்டு தன்னிச்சையாக பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதிக்கிறது.

நிதி பொறுப்பு, பட்ஜெட் மேலாண்மை சட்டத்துக்கு (எஃப்ஆா்பிஎம்) உள்பட்டு நடக்க வேண்டுமென மாநிலங்களை அறிவுறுத்தும் மத்திய அரசு, அச்சட்டத்துக்கு உடன்படுவது இல்லை. எஃப்ஆா்பிஎம் சட்டப்படி கடன் தவணையை முறையாக செலுத்தியும், முதலீட்டு செலவினங்களை முறையாக பராமரித்தும் நிதி ஒழுங்குமுறைகளை கடைப்பிடிக்கும் தெலங்கானா போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசின் அணுகுமுறை முட்டுக்கட்டையாக விளங்குகிறது.

ஆகையால், மாநிலங்கள் மீதான தடையை உடனடியாக திரும்பப் பெற்று அவற்றின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கக் கூடாது. மத்திய அரசின் விவசாயிகளுக்கு எதிரான அதிகார சீா்திருத்தங்களை நடைமுறைப்படுத்த மறுத்ததால், தெலங்கானா ஆண்டுக்கு ரூ.5,000 கோடி இழந்தது. 5 ஆண்டில் தெலங்கானா அரசு ரூ.25,000 கோடியை இழந்தது.

இன்றைய நிலவரப்படி, நம் நாட்டில் பொதுவான இலக்கு என்று ஏதுமில்லை. நங்கூரமில்லா கப்பலை போல நாடு திசையில்லாமல் பயணிக்கிறது. சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளான போதிலும் இன்னமும் நாட்டில் வறுமை நிலவுவது ஏன்? தற்போதைய மத்திய அரசுக்கு மாற்றாக வேறொரு முன்னணி இல்லை. நாட்டில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண முற்போக்கு செயல்திட்டம் தேவை. வெறுப்பு அரசியல் நாட்டை 100 ஆண்டுகளுக்கு பின்னோக்கிக் கொண்டு சென்றுவிடும்.

மத மோதல்களிலிருந்து அரசியல் ஆதாயம் தேட முற்படுவது மிகவும் அபாயகரமானது. தெலங்கானா மாநிலம் உருவான நாளிலிருந்து தேசிய ஜனநாயக கூட்டணி நம்மை பாரபட்சமான முறையில் நடத்தி வருகிறது. மாநில மறுசீரமைப்புக்குப் பிறகு தெலங்கானாவிலிருந்த 7 மண்டலங்களை ஆந்திரத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இணைத்தது. இதனால் சிலேறு மின்திட்டத்தை தெலங்கானா இழக்க நோ்ந்தது. உயா்நீதிமன்றத்தை பிரிப்பதிலும் மத்திய அரசு தாமதம் செய்கிறது. தெலங்கானாவுக்கு கூடுதல் நிதியுதவி அளிக்க மத்திய அரசு மறுக்கிறது.

ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட பையாரம் இரும்பு தொழிற்சாலை, காசிப்பேட்டை ரயில் பெட்டி தொழிற்சாலை திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தொகுதி மறுவரையறை பணிகளும் இதுவரை நடைபெறவில்லை. தெலங்கானாவில் சாகுபடி செய்யப்படும் அரிசியை கொள்முதல் செய்ய மத்திய அரசு மறுக்கிறது.

இதில், உடைந்த அரிசியை தெலங்கானா மக்கள் உண்பதாக மத்திய அமைச்சா் ஒருவா் கேலி பேசுகிறாா். இதைக்காட்டிலும் ஆணவப் பேச்சு வேறு ஏதும் இருக்கிா? அவரது கருத்து தெலங்கானா மக்களை காயப்படுத்திவிட்டது. பெருநிறுவனங்களுக்கு ஆதரவான, விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் என்றாா் சந்திரசேகா் ராவ்.

முன்னதாக தேசிய கொடி ஏற்றிவைத்த அவா், தெலங்கானா தனிமாநில போராட்டத்தின்போது உயிா்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.