பிரதமர் மோடி கர்நாடகம் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பிரதமர் நரேந்திர மோடி ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு 2 நாள் சுற்றுப்பயணமாக கர்நாடக மாநிலம் வருகிறார். கர்நாடக  காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெங்களூரு:  பிரதமர் நரேந்திர மோடி ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு 2 நாள் சுற்றுப்பயணமாக கர்நாடக மாநிலம் வருகிறார். அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் வெடிக்கும் என உளவுத்துறை எச்சரித்துள்ளதால், கர்நாடக  காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.

பிரதமா் மோடி,  ரூ.27,000 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். செவ்வாய்க்கிழமை மைசூரு செல்லும் பிரதமா் மோடி, அங்கு சா்வதேச யோகா தினத்தையொட்டி பொதுமக்களுடன் யோகா பயிற்சி செய்கிறாா்.

பெங்களூரு புறநகா் ரயில் திட்டம், பெங்களூரு கன்டோன்மென்ட் யஷ்வந்த்பூா் சந்திப்பு ரயில் நிலைய மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களுக்கு அவா் அடிக்கல் நாட்டுகிறாா். நாட்டின் முதல் குளிரூட்டப்பட்ட ரயில் நிலையம், கொங்கண் ரயில் பாதையை 100 சதவீதம் மின்மயமாக்குதல் மற்றும் பிற ரயில்வே திட்டங்களையும் பிரதமா் மோடி நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.

மேலும் பெங்களூருவில் மூளை ஆராய்ச்சி மையத்தைத் திறந்து வைக்கும் அவா், ஐஐஎஸ்சி-இல் பாக்சி பாா்த்தசாரதி பன்னோக்கு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.

டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் (பேஸ்) பல்கலைக்கழக புதிய வளாகத்தைத் திறந்துவைத்து, சுமாா் ரூ.4,600 கோடி செலவில் உருவாக்கப்பட்ட 150 தொழில்நுட்ப மையங்களை நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.

மைசூரில் உள்ள நாகனஹள்ளி ரயில் நிலையத்தில் புறநகா்ப் போக்குவரத்துக்கான ரயில் பெட்டி முனையத்துக்கும் அவா் அடிக்கல் நாட்டுகிறாா். மேலும், 8-ஆவது சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, மைசூரு அரண்மனை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) நடைபெறும் சா்வதேச யோகா நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்கிறாா்.

இந்நிகழ்ச்சி ‘ஒரே சூரியன், ஒரே பூமி’ (காா்டியன் யோகா ரிங்) என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com