மகாராஷ்டிர பேரவைக் கலைப்பு? அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

மகாராஷ்டிர சட்டப்பேரவை கலைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே (கோப்புப்படம்)
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே (கோப்புப்படம்)

மகாராஷ்டிர சட்டப்பேரவை கலைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

சிவசேனை கட்சிக்கு எதிராகத் திரும்பியுள்ள ஏக்நாத் ஷிண்டே மற்றும் எம்எல்ஏக்களால் சிவசேனை கூட்டணியின் பலம் குறைந்துள்ளதால் மகாராஷ்டிரத்தில் தற்போதைய கூட்டணியின் பலம் குறைந்திருக்கிறது.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இணைந்த 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. சட்டப்பேரவையில் மொத்தம் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 288 என்ற நிலையில், சிவசேனை -56  தேசியவாத காங்கிரஸ் -53, காங்கிரஸ் -44, பாஜக - 106 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளனர். 

'மகா விகாஸ் அகாடி' கூட்டணியில் 169 எம்எல்ஏக்களும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 113 எம்எல்ஏக்களும் 5 சுயேச்சைகளும் உள்ளனர். 

இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற சட்டமேலவைத் தேர்தலில் பிற கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களின் ஆதரவுடன்  எதிர்பார்த்ததைவிட ஓர் இடம் அதிகமாக மொத்தம் 5 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தொடர்ந்து அதற்கு மறுநாளே (நேற்று செவ்வாய்க்கிழமை) சிவசேனை கட்சியைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, ஆதரவு எம்எல்ஏக்களுடன் சூரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். 

இன்று அசாம் மாநிலம் குவாஹாத்திக்குச் சென்றுள்ள ஏக்நாத் ஷிண்டே, தன்னையும் சேர்ந்து 40 எம்எல்ஏக்கள் தன்னுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் மொத்தம் 288 எம்எல்ஏக்கள் என்ற நிலையில், ஆட்சியமைக்க 145 எம்எல்ஏக்கள் தேவை. அந்தவகையில் பாஜக கூட்டணி 113 எம்எல்ஏக்களை ஏற்கெனவே கொண்டுள்ள நிலையில் தற்போது 40 எம்எல்ஏக்கள் அசாமில் முகாமிட்டுள்ளனர். எம்எல்ஏக்கள் இருக்கும் புகைப்படங்களும் விடியோக்களும் வெளியாகியுள்ளதால் இது உறுதியாகியுள்ளது. ஏக்நாத் ஷிண்டே மற்றும் எம்எல்ஏக்கள் அனைவரும் குவாஹாத்தியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். 

இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவையை கலைக்க முதல்வர் உத்தவ் தாக்கரே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. உடல்நலக் குறைவு காரணமாக முதல்வர் உத்தவ் தாக்கரே காணொலி மூலம் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com