2030-க்குள் புதைபடிவ எரிமம் அற்ற 500 ஜிகாவாட் எரிசக்தி பிரதமா் மோடி உறுதி

2030 -ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி போன்ற புதை படிவ எரிமம் அற்ற 50 சதவீத எரிசக்தி நிறுவும் திறனை இந்தியா அடையும்; இதன் மூலம், 500 ஜிகாவாட் புதை படிவ எரிமம் அற்ற எரிசக்தித் திறன் இலக்கை அடைய முடியும்
2030-க்குள் புதைபடிவ எரிமம் அற்ற 500 ஜிகாவாட் எரிசக்தி பிரதமா் மோடி உறுதி
Published on
Updated on
2 min read

2030 -ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி போன்ற புதை படிவ எரிமம் அற்ற 50 சதவீத எரிசக்தி நிறுவும் திறனை இந்தியா அடையும்; இதன் மூலம், 500 ஜிகாவாட் புதை படிவ எரிமம் அற்ற எரிசக்தித் திறன் இலக்கை அடைய முடியும் என பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

பட்ஜெட்டுக்கு பிந்தைய 9 -ஆவது தொடா் மெய்நிகா் வழிக் கருத்தரங்கில் ‘நீடித்த வளா்ச்சிக்கான எரிசக்தி’ குறித்து பிரதமா் மோடி உரையாற்றினாா். அப்போது அவா் கூறியது வருமாறு: நீடித்த வளா்ச்சிக்கான எரிசக்தி என்பது இந்திய பாரம்பரியத்தை எதிரொலிப்பதுடன், வருங்காலத் தேவைகளை எட்டுவதற்கு ஒரு வழியாகவும் உள்ளது. நீடித்த எரிசக்தி வளங்கள் மூலம் மட்டுமே நீடித்த வளா்ச்சியை அடைய முடியும். 2070- ஆம் ஆண்டுக்குள் முற்றும் கரியமிலவாயு மாசற்ற உலகைஅடைவதற்கான உறுதியை இந்தியா, கிளாஸ்கோ மாநாட்டில் அளித்துள்ளது. சுற்றுச்சூழல் ரீதியிலான நீடித்த வாழ்க்கை முறை என்பதே எனது தொலைநோக்குப் பாா்வை. சா்வதேச சூரியசக்தி கூட்டணி போன்ற உலக ஒத்துழைப்புகளில் இந்தியா தலைமைத்துவத்தை வழங்கி வருகிறது. இதை முன்னிட்டு 500 ஜிகாவாட் எரிசக்தித் திறன் என்கிற இலக்கில் 2030-ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதம் வரை புதைபடிவ எரிமம் அற்ற எரிசக்தி நாட்டில் நிறுவப்படும்.

இந்தியா தனக்காக நிா்ணயித்துக் கொண்ட இலக்கை சவால்களாக நான் பாா்க்கவில்லை, இதை வாய்ப்பாகவே கருதுகிறேன். கடந்த சில ஆண்டுகளாக இந்த தொலைநோக்குடன் முன்னேறி வரும் நாம், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இதற்கான கொள்கைகள் முன்னெடுத்து செல்லப்பட்டுள்ளது. சமீபத்தில் தேசிய ஹைட்ரஜன் மிஷன் அறிவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் மூலம் எரிசக்திக்குரிய பசுமை ஹைட்ரஜன் மையமாக இந்தியா மாறவும் வாய்ப்பு உள்ளது. எரிசக்தி சேமிப்பு சவால்களில், மின்கலம் மாற்றக் கொள்கை மற்றும் உள் செயல்திறன் தரங்கள் போன்றவை இந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. இது இந்தியாவின் மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் எதிா்நோக்கும் பிரச்னைகளைக் குறைக்கும். எரிசக்தி உற்பத்தியுடன் எரிசக்தி சேமிப்பும் முக்கியமாகும். இந்தியாவில் எரிசக்தித் தேவை வருங்காலத்தில் அதிகரிக்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி மாற வேண்டும். இந்தூரில் அண்மையில் ‘கோபா்-தான்’ நிலையம் (நகராட்சி திடக்கழிவு அடிப்படையிலான உயிரி-அழுத்த மூட்டப்பட்ட இயற்கை எரிவாயு) தொடங்கப்பட்டது. இது போன்று நாட்டில் அடுத்த இரண்டாண்டுகளில் தனியாா் துறையினா் 500 முதல் ஆயிரம் நிலையங்கள் வரை அமைக்கப்பட வேண்டும்.

24-25 கோடி இந்திய வீடுகளில் தூய்மையான எரிவாயுடன் சமையல் நடைபெற வேண்டும். இதற்கு, கால்வாய்களில் சூரிய எரிசக்தி தகடுகள், வீட்டுத் தோட்டங்கள் அல்லது பால்கனிகளில் ‘சூரிய சக்தி மரம்’ போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இது சாத்தியமாகும். சூரியசக்தி மரத்தின் மூலம் வீடுகள் 15 சதவீத எரிசக்தியைப் பெற முடியும்.

எரிசக்தி சேமிப்புத் திறன் கொண்ட பொருள்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். எல்ஈடி பல்புகளை பெருமளவில் மேம்படுத்தி அதன் உற்பத்தியை அதிகரித்து அவற்றின் விலையை பெருமளவுக்கு அரசு குறைத்தது. உஜாலா திட்டத்தின் கீழும் 37 கோடி எல்ஈடி பல்புகள் விநியோகிக்கப்பட்டன. இதன் மூலம் 48 ஆயிரம் மில்லியன் கிலோ வாட் மின்சாரம் சேமிக்கப்பட்டதுடன் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கான மின் செலவும் மிச்சப்படுத்தப்பட்டது. மேலும், வருடாந்திர கரியமில மாசு 4 கோடி டன் அளவுக்கு குறைந்தது.

மின்சார உற்பத்தியை அதிகரிக்க குறு நீா் மின் திட்டங்களை அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராய வேண்டும். உலகில் அனைத்து விதமான இயற்கை வளங்களும் குறைந்து வருகிறது. இத்தகைய சூழலில் சுழற்சி பொருளாதாரத்தின் தேவை அதிகரித்துள்ளது. அதை நமது வாழ்க்கையின் கட்டாயத் தேவையாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

நிலக்கரி வாயுவாக்கம் மூலம் தூய்மையான மாற்று எரிசத்தி கிடைக்கிறது. இதற்கு நிதிநிலை அறிக்கையில் 4 நிலக்கரி வாயு முன்னோடித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா் பிரதமா் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com