மின்னணு துறையின் வடிவமைப்பு மற்றும் உற்பத்திகளை விரிவுபடுத்தி, மேம்படுத்தும் நோக்கத்தில் சில வகையான தொலைக்காட்சி, கைப்பேசி உதிரி மின்னணுப் பொருள்களுக்கு இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது.
இதற்காக, இந்த உதிரி மின்னணுப் பொருள்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தப்பட்ட வகையிலிருந்து முற்றிலும் வரியற்ற வகை பிரிவுக்கு மாற்றி மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய தகவல், தொழில்நுட்பத் துறை (ஐடி) அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மின்னணு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (இஎஸ்டிஎம்) துறைகளை விரிவுபடுத்தி, மேம்படுத்தும் நோக்கத்தில் சமதளப் பலகக் காட்சியகம் (பிளாட் பேனல் டிஸ்ப்ளே மாட்யூல்கள்), சில வகை கேமராக்கள் ஆகியவற்றை "கட்டுப்படுத்தப்பட்ட வகையிலிருந்து', "இலவச வகைக்கு' கொண்டு வர இறக்குமதி கொள்கை திருத்தப்பட்டது.
மின்னணு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (இஎஸ்டிஎம்) துறைகளை விரிவுபடுத்தி, மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவை உலகளாவிய மின்னணு உற்பத்தி மையமாக மாற்றுவதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதையொட்டி, அறிதிறன் கைப்பேசிகள், தகவல் தொழில்நுட்ப வன்பொருள்கள் (ஹார்டுவேர்), தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் உற்பத்தியை ஊக்குவிக்க சில உந்துதல்களை அரசு மேற்கொள்கிறது.
இந்தப் பின்னணியில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் அந்நிய வர்த்தக மேம்பாட்டு ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சமதளப் பலகக் காட்சியகம், கைப்பேசிகள் உள்ளிட்ட குறிப்பிட்ட கேமராக்களுக்கு தேவையான உதிரி மின்னணுப் பொருள்கள் (லிக்யூட் கிரிஸ்டல்கள், செமிகண்டக்டர்களான எமிட்டிங் டையோட்கள்) ஆகியவை இறக்குமதியில் "கட்டுப்படுத்தப்பட்ட வகையிலிருந்து' "இலவச வகைக்கு' கொண்டுவரப்பட்டுள்ளன. மேற்கூறிய முடிவுகள் தற்சார்பு இந்தியா என்கிற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையில் மின்னணுப் பொருள்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வலு சேர்க்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.