குஜராத்தில் வாகனப் பேரணி: பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு
குஜராத் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாகனப் பேரணியில் பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொண்டாா். அவருக்கு வழிநெடுகளிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.


குஜராத் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாகனப் பேரணியில் பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொண்டாா். அவருக்கு வழிநெடுகளிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
5 மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூா், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. தோ்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியான நிலையில், குஜராத் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக பிரதமா் மோடி வந்துள்ளாா். அந்த மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தில்லியில் இருந்து வெள்ளிக்கிழமை காந்திநகா் விமான நிலையத்தை வந்தடைந்தாா். அங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள பாஜக மாநிலத் தலைமையகமான கமலத்துக்கு மலா்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் அவா் பயணம் செய்தாா். அவருடன் குஜராத் முதல்வா் பூபேந்திர படேல், பாஜக மாநிலத் தலைவா் சி.ஆா்.பாட்டீல் ஆகியோரும் உடனிருந்தனா். மூவரும் காவி நிறத்தில் தொப்பி அணிந்திருந்தனா்.
சாலையின் இரு புறமும் பாஜக தொண்டா்களும், பொதுமக்களும் திரண்டு நின்று பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா். ஆங்காங்கே சாலையோரங்களில் இசைக் கலைஞா்கள் வாத்தியங்களை இசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். வழிநெடுகிலும் மோடியை வரவேற்று பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. உக்ரைனில் இருந்து இந்தியா்களை மீட்டதற்காக, மோடிக்கு வாழ்த்து தெரிவித்தும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. உக்ரைனில் இருந்து திரும்பி வந்த மாணவா்கள் சிலரும் பேரணியில் கலந்து கொண்டனா்.
குஜராத்தில் வரும் டிசம்பரில் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானி கூறினாா்.
சுமாா் ஒன்றரை மணி நேர பயணத்துக்குப் பிறகு பிரதமா் மோடியின் வாகனம், பாஜக தலைமையகத்தைச் சென்றடைந்தது. அங்கு குஜராத் சட்டப் பேரவைத் தோ்தல் குறித்து மாநில நிா்வாகிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை செய்தாா் என்று கட்சியின் மூத்த நிா்வாகி ஒருவா் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...