3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை நடத்த மத்திய அரசு விரும்பவில்லை: ஆளுநர் குறித்து நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை நடத்த மத்திய அரசு விரும்பவில்லை. நீட் விலக்கு, கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார் எனக் கூறி மக்களவையில்

News image
Updated On :15 மார்ச் 2022, 10:31 pm

 நமது நிருபர்

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை நடத்த மத்திய அரசு விரும்பவில்லை. நீட் விலக்கு, கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார் எனக் கூறி மக்களவையில் கேள்வி நேரத்துக்குப் பின் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு பேசினார்.
 தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல், குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்படுவது குறித்து விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு டி.ஆர்.பாலு நோட்டீஸ் அளித்திருந்தார்.
 அதன்படி செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்துக்குப் பின்னர் இந்தப் பிரச்னையை எழுப்பி, அவர் பேசியதாவது:
 அரசியல் சாசனத்தில் மாநில ஆளுநர்களுக்கு மகத்தான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாநில சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது போன்ற அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின்னர் சட்டப்பேரவையில் 7-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. இதில் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் அல்லது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும். ஆனால், இந்த 7 மசோதாக்களும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படவில்லை. அவை அப்படியே பெட்டியில் வைக்கப்பட்டுள்ளன என்றார் டி.ஆர். பாலு.
 அதற்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, "இது மாநிலம் தொடர்பான விவகாரம், இதுகுறித்து பேசுவதற்கு அனுமதிக்க முடியாது' என்றார்.
 அப்போது டி.ஆர் பாலு, "நாங்கள் தமிழகத்தில் காட்டாட்சியா நடத்துகின்றோம்? சட்டத்தின் கீழ் ஆட்சி நடைபெற்று அரசு செயல்பட விரும்புகின்றோம். அதேசமயத்தில் ஆளுநர், நீட் தேர்வு விலக்கு, கூட்டுறவு சங்க மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்களுக்கு எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் நிறுத்தி வைப்பது எப்படி? ஆட்சியை நடத்துவது எப்படி ? சட்டத்தின் ஆட்சி மீது நம்பிக்கையில்லையா ? ஏன் இந்த ஆளுநரை வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் ? ஆளுநரை மாற்றுங்கள்' என்றார்.
 இதற்கு மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, "ஆளுநர் குறித்து பேச அனுமதிக்கக் கூடாது. நோட்டீஸ் கொடுத்து முன் அனுமதியைப் பெறவேண்டும்' என்றார்.
 பின்னர், நாடாளுமன்றத்துக்கு வெளியே வந்து இந்த விவகாரம் குறித்து டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட் உள்ளிட்ட 7 மசோதாக்கள் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. எந்த தகவலும் இல்லை. மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும். இதில் மத்திய அரசு என்ன நினைக்கிறதோ தெரியவில்லை. சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சிகளோடு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தோம். அவர் எங்களிடம், கல்வித் துறை, சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோரை அழைக்கிறேன். எனது முன்னிலையில் இந்த நீட் விவகாரத்தில் முடிவு எடுக்கிறேன் என்றார். ஆனால் இதுவரை அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.
 நீட் விவகாரத்தில் ஆளுநர் முதல்வரிடம் உறுதியளித்துள்ளதாக வந்த செய்தி குறித்து கேட்கிறீர்கள். அது நடக்க வேண்டும். அப்படி கூறியிருந்தால் வரவேற்கத்தக்கது.
 அவர் நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினால் மகிழ்ச்சிதான். மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
 ஆனால், இதுவரை ஆளுநர் ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருந்தார்.
 ஒரு மசோதா அனுப்பப்பட்டால் அதை ஆளுநர் முறைப்படி அனுப்ப வேண்டும். அதிலும் நீட் விலக்கு மசோதா அரசியல் சாசனத்தின்படி குடியரசுத் தலைவருக்கு தான் அனுப்பப்பட வேண்டும். அப்படி அனுப்பாமல் மாநில அரசுக்கு திருப்பி அனுப்புகிறார். இது அரசியல் சாசனத்துக்கு விரோதமான நடவடிக்கை. அவரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமையை முதல்வர் திறம்பட செயல்படவிடாமல் ஆளுநர் தடுக்கிறார் என்றார் டி.ஆர்.பாலு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.