3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: விசாரணை ஆவணங்களை தாக்கல் செய்ய என்சிபிசிஆருக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

தஞ்சாவூரைச் சேர்ந்த 17 வயது மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) நடத்திய விசாரணை தொடர்புடைய

News image
Updated On :16 மார்ச் 2022, 10:06 pm

 நமது நிருபர்

தஞ்சாவூரைச் சேர்ந்த 17 வயது மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) நடத்திய விசாரணை தொடர்புடைய ஆவணங்களை சீலிட்ட உறையில் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. மேலும், மேல்முறையீட்டு மனுவில் என்சிபிசிஆர் தரப்பில் இடையீட்டு மனுவை சேர்க்கவும் அனுமதித்தது.
 அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மகள் லாவண்யா (17), தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ மிஷனரி மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், பூச்சிமருந்தை குடித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மதமாற்றத்துக்கு கட்டாயப்படுத்தப்பட்டதால், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
 இதுதொடர்பான விவகாரத்தை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மாணவி தற்கொலை விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கடந்த ஜனவரி 31-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக டிஜிபி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரிக்க அனுமதி அளித்தது. அதேநேரத்தில், உயர்நீதிமன்றம் தெரிவித்த குறிப்பிட்ட கருத்துகளை நீக்கக் கோருவது தொடர்பான விவகாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
 இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தங்களை ஒரு தரப்பாக சேர்க்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில், "இந்த விவகாரத்தில் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணையைத் தொடங்கவும், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும், அதுதொடர்பாக நடவடிக்கை அறிக்கையை (ஆர்டிஆர்) ஆணையத்தில் தாக்கல் செய்யவும் கேட்டு தமிழக டிஜிபிக்கு என்சிபிசிஆர் ஜனவரி 20-ஆம் தேதி கடிதம் எழுதியது. ஆனால், போலீஸார் தரப்பில் உரிய பதில் அளிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தின் முக்கியத்துவம் கருதி என்சிபிசிஆர் தலைவர் தலைமையிலான குழு விசாரணை நடத்த தஞ்சாவூருக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளது. இதுதொடர்பான விவரங்களை நீதிமன்றத்துக்கு உதவிடும் வகையில் அளிக்க கடமைப்பட்டுள்ளதாக என்சிபிசிஆர் கருதுகிறது' என தெரிக்கப்பட்டுள்ளது.
 இந்த நிலையில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பெலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, என்சிபிசிஆர் தரப்பில் வழக்குரைஞர் ஸ்வருபமா சதுர்வேதி ஆஜராகி, இந்த மேல்முறையீட்டு வழக்கில் என்சிபிசிஆர் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆணையம் நடத்திய விசாரணை தொடர்புடைய ஆவணங்களை சீலிட்ட உறையில் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றார். மேலும், எதிர்மனுதாரர் பதில் அளிக்க விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, ஆவணங்களைத் தாக்கல் செய்ய என்சிபிசிஆருக்கு அனுமதி அளித்து விசாரணையை ஏப்ரல் 11-ஆம் தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.