புதுதில்லி: சில பொறியியல்(பி.இ.,) படிப்புகளில் சேர +2 வகுப்பில் கணிதம், வேதியியல் படித்திருப்பது தேவையில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டிற்கான(2022-23) புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ஏ.ஐ.சி.டி.இ வெளியிட்டுள்ளது.
பொறியியல் படிப்புகளில் சேர, +2 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களின் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். இந்த பாடங்களில் பெற்ற ‛கட் ஆப்' மதிப்பெண்களை பொறுத்து தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.
நடப்பு கல்வியாண்டு (2022-23) முதல் சில பொறியியல் படிப்புகளில் சேர கணிதம், வேதியியல் பாடங்கள் தேவையில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) அறிவித்துள்ளது.
அதன்படி, கணினி அறிவியல், மின் மற்றும் மின்னணு பொறியியல் படிப்பில் சேர +2 வகுப்பில் வேதியியல் படித்திருப்பது கட்டாயமில்லை மற்றும் வேளாண் பொறியியல், உணவு பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் படிப்புகளில் சேர +2 வகுப்பில் கணிதம் தேவையில்லை என ஏ.ஐ.சி.டி.இ தெரிவித்துள்ளது.