அமித் ஷாவுக்கு விருந்தளித்த கங்குலி; அரசியல் நகர்வின் முன்னோட்டமா?

பிசிசிஐ தலைவராக உள்ள செளரவ் கங்குலியின் வீட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் விருந்துக்கு சென்றது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
அமித் ஷாவுக்கு விருந்தளித்த கங்குலி
அமித் ஷாவுக்கு விருந்தளித்த கங்குலி

மேற்குவங்கம் தலைநகர் கொல்கத்தாவுக்கு சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக உள்ள கங்குலியின் வீட்டிற்கு நேற்றிரவு சென்றார். பிசிசிஐயின் செயலாளராக அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பதவி வகிப்பதால், கங்குலி வீட்டிற்கு அவர் சென்றது மரியாதை நிமித்தமான ஒன்று எனக் கூறப்படுகிறது.

பலத்த பாதுகாப்புக்கிடையே, வெள்ளை நிற எஸ்யூவி காரில் அமித் ஷா, கங்குலி வீட்டிற்கு நேற்றிரவு வந்திறங்கினார். கங்குலி வீடு அமைந்துள்ள சாலை குறுகியதாக இருந்தபோதிலும், அமித் ஷாவை பார்க்க மக்கள் திரண்டிருந்தனர். 

பின்னர், கங்குலியின் வீட்டில் அமித் ஷாவுக்கு விருந்தளிக்கப்பட்டது. இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய கங்குலி, "இந்த விருந்தில் எந்த வித அரசியலும் இல்லை. பத்தாண்டுகளாக எனக்கு அமித் ஷாவை தெரியும். பல முறை சந்தித்திருக்கிறேன். நாங்கள் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. 

எனக்கு அவரை 2008 முதல் தெரியும். நான் விளையாடும் போது, ​​நாங்கள் சந்தித்தோம் ஆனால் நான் சுற்றுப்பயணத்தில் இருந்ததால் அதிக முறை சந்தித்தது இல்லை. அவரின் மகனுடன் பணி செய்கிறேன். இது பழைய கால நட்பு" என்றார்.

அமித் ஷாவுக்கு என்ன விருந்தளிக்கப்பட்டது என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு சிரித்தபடி பதிலளித்த கங்குலி, "வீட்டிற்கு சென்ற பிறகு தான் பார்க்க வேண்டும். அவர் சைவம்" என்றார்.

அமித் ஷாவுடனான சந்திப்புல் அரசியல் இல்லை என கங்குலி கூறுவது முதல்முறை அல்ல. கடந்தாண்டு, மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு, அமித் ஷா, கங்குலி இடையே சந்திப்பு நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி பாஜகவில் இணையவுள்ளதாக அப்போது செய்தி வெளியாகின. ஆனால், அதற்கு கங்குலி மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இதேபோல், கடந்த 2015ஆம் ஆண்டு, தேர்தலுக்கு முன்பு, பாஜகவில் கங்குலி இணையவுள்ளதாக தகவல் வெளியானது. திதிக்கு (மம்தா) எதிராக தாதா (கங்குலி) களமிறங்குவார் என்றெல்லாம் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com