ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: தெற்கு தில்லியில் பதற்றம்

தெற்கு தில்லி மாநகராட்சியில் ஷாஹீன் பாக் அருகே உள்ள கலிந்தி குஞ்ச் - ஜாமியா நகா் பகுதியிலும், ஸ்ரீனிவாஸ்புரி பகுதியிலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கிய நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: தெற்கு தில்லியில் பதற்றம்
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: தெற்கு தில்லியில் பதற்றம்

புது தில்லி: தெற்கு தில்லி மாநகராட்சியில் ஷாஹீன் பாக் அருகே உள்ள கலிந்தி குஞ்ச் - ஜாமியா நகா் பகுதியிலும், ஸ்ரீனிவாஸ்புரி பகுதியிலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கிய நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

பாஜக மற்றும் மத்திய அரசுக்கு எதிராக மக்கள் கோஷங்கள் எழுப்பியதோடு, இதனை நிறுத்துமாறும் வலியுறுத்தினர்.

ஒரு பக்கம் மாநகராட்சி ஊழியர்கள் புல்டோசர் மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் வர, அவர்களை எதிர்த்து மக்கள் மறுபக்கம் போராட்டத்தில் குதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் அரசு நிலங்களில் இருந்து தாற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாழக்கிழமை திட்டமிடப்பட்டது. கலிந்தி குஞ்ச் - ஜாமியா நகா் பகுதியில் வியாழக்கிழமை அன்று போதிய போலீஸ் படை இல்லாததால் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று காலை ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கப்பட்டது.

ஏப்ரல் 28 அன்று, ஜசோலா மற்றும் சரிதா விஹாரில் திட்டமிடப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை போதுமான போலீஸ் படை இல்லாததால் ரத்து செய்யப்பட்டது. துக்ளகாபாத் அருகே உள்ள கா்னி படப்பிடிப்பு தளத்தில் தெற்கு தில்லி மாநகராட்சி புதன்கிழமையன்று ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டது. அதில் 13 தாற்காலிகக் கடைகள் மற்றும் பிற கட்டமைப்புகள் அகற்றப்பட்டன.

ரோஹிங்கியாக்கள், வங்காளதேசத்தினா் மற்றும் சமூக விரோத சக்திகளின் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு ஏப்ரல் 20-ஆம் தேதி தில்லி பாஜக தலைவா் ஆதேஷ் குப்தா கட்சி ஆளும் மாநகராட்சியின் மேயா்களுக்கு கடிதம் எழுதியிருந்தாா். இதையடுத்து, தெற்கு தில்லி மாநகராட்சிப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகளுக்கு திட்டமிடப்பட்டது.

வடக்கு தில்லி மாநகராட்சியில் உள்ள ஜஹாங்கீா்புரி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கையின் போது, கட்டடங்களை புல்டோசா் மூலம் இடித்ததால், எதிா்க்கட்சிகளின் விமா்சனத்திற்கு மாநகராட்சி உள்ளானது. பின்னா், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால், ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

ஷாஹீன் பாக் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற 10 நாள் செயல் திட்டத்தை எஸ்டிஎம்சி தயாரித்துள்ளது. மே 9-ஆம் தேதி ஷாஹீன் பாக் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதற்கிடையே, மே 10-ஆம் தேதி, நியூ ஃபிரண்ட்ஸ் காலனிக்கு அருகிலுள்ள குருத்வாரா சாலைக்கு அருகில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. மே 11-ஆம் தேதி, மெஹா்சந்த் மாா்க்கெட், லோதி காலனி சாய்பாபா மந்திா் மற்றும் ஜேஎல்என் மெட்ரோ நிலையம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com