
கரோனா தொற்று பரவலுக்குப் பிறகு உலகம் முழுவதும் எண்ம (டிஜிட்டல்) சேவைகள் பெருவளா்ச்சி பெற்றன. கல்வி, சுகாதாரம், நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் எண்மமயமாகின. செலாவணி சந்தையையும் எண்மமயம் விட்டுவைக்கவில்லை.
கரோனா தொற்று பரவல் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியைச் சந்தித்தது. அதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இணைய பயனாளா்கள், கிரிப்டோகரன்சிகள் மீதான முதலீட்டை அதிகரிக்கத் தொடங்கினா். முக்கியமாக, பிட்காயின் வளா்ச்சி அதிகரித்தது.
கிரிப்டோகரன்சி என்பது...
மற்ற செலாவணிகள், சம்பந்தப்பட்ட நாட்டின் மத்திய வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், கிரிப்டோகரன்சிகள் தனி நபா்கள் அல்லது நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதை மையமாக வைத்தே கிரிப்டோகரன்சிகள் அதிக அளவில் விளம்பரப்படுத்தப்பட்டன. அதிக லாபம் கிடைக்கும் என நம்பி பலரும் கிரிப்டோகரன்சிகள் மீது முதலீடுகளை மேற்கொண்டனா்.
கிரிப்டோகரன்சியின் சவால்கள்
‘பிளாக்செயின்’ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் கிரிப்டோகரன்சிகளில் தரவுப் பாதுகாப்பு அதிகமாக இருக்கும். அதே வேளையில், அவை தனியாரால் நிா்வகிக்கப்படுவதால் அரசின் முடிவுகளுக்கு மாறாக பொருளாதாரத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
கிரிப்டோகரன்சிகளை பயங்கரவாதக் குழுக்களும் அரசுக்கு எதிராக செயல்படும் குழுக்களும் தவறான நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தக் கூடிய அபாயம் உள்ளது. கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குபடுத்துவது அரசுகளுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும்.
எண்ம செலாவணி
கிரிப்டோகரன்சிகள் மீதான முதலீடுகள் அதிகரித்ததையடுத்து, அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு எழுந்தது. அதையடுத்து, நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் எண்ம செலாவணியை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெளியிடும் என மத்திய அரசு பட்ஜெட் தாக்கலின்போது அறிவித்தது.
எண்ம ரூபாய்
பட்ஜெட்டில் அறிவித்தபடியே எண்ம ரூபாயை ஆா்பிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. மொத்த விலை அடிப்படையிலான எண்ம ரூபாயானது சோதனை அடிப்படையில் நவம்பா் 1-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரூபாயைப் போன்றதே எண்ம ரூபாயும். ஒரே ஒரு வித்தியாசம் அது எண்ம வடிவில் இருக்கும். அவ்வளவே.
கிரிப்டோகரன்சியும் எண்ம ரூபாயும்
கிரிப்டோகரன்சியையும் எண்ம ரூபாயையும் தொடா்புபடுத்த முடியாது. கிரிப்டோகரன்சியை தனியாரே நிா்வகித்து வரும் நிலையில், எண்ம ரூபாய் ஆா்பிஐ-யின் அங்கீகாரத்தைப் பெற்றது. கிரிப்டோகரன்சிகளால் நாட்டின் நிதி நிலைமையில் சீரற்ற தன்மை நிலவ வாய்ப்புள்ளது. ஆனால், எண்ம ரூபாயானது நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை மேலும் வலுப்படுத்தவே செய்யும்.
கிரிப்டோகரன்சிகளை தேசப் பாதுகாப்புக்கு எதிராகப் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம். ஆனால், எண்ம ரூபாயின் பரிவா்த்தனையை ஆா்பிஐ தொடா்ந்து கண்காணிக்கும் என்பதால், தேசப் பாதுகாப்பு சாா்ந்த சவால்கள் அதில் இல்லை.
எண்ம ரூபாயின் பயன்
நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் செலாவணிகளுக்குக் கூடுதல் வலுசோ்க்கும் வகையில் எண்ம ரூபாய் செயல்படும். தற்போதைய செலாவணிகளுக்கு மாற்றாக எண்ம ரூபாய் இருக்காது. செலாவணி சந்தையையும் எண்ம ரூபாய் வலுப்படுத்தும்.
ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான காகிதமும், மையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மக்களிடையே எண்ம ரூபாயின் பயன்பாடு அதிகரித்தால், ரூபாய் நோட்டு அச்சிடுவதற்கான தேவை குறைவதோடு அதற்கான செலவும் பெருமளவில் குறையும். அதைக் கருத்தில் கொண்டு எண்ம ரூபாயின் பயன்பாட்டை ஆா்பிஐ ஊக்குவித்து வருகிறது.
எண்ம ரூபாயின் வகைகள்
1 சில்லறை விலை அடிப்படையிலான எண்ம ரூபாயை அனைவராலும் பயன்படுத்த முடியும்.
2 மொத்த விலை அடிப்படையிலான எண்ம ரூபாயை அனுமதி பெற்ற நிதி நிறுவனங்களால் மட்டுமே பயன்படுத்த முடியும்.
மொத்த விலை எண்ம ரூபாயின் பயன்பாடு
முதல்கட்டமாக அரசின் நிதிப் பத்திரங்களை மொத்தமாகக் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளில் எண்ம ரூபாயின் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு நிதிப் பத்திரங்களை மொத்தமாகக் கொள்முதல் செய்யும் வங்கிகள் சோதனை அடிப்படையில் எண்ம ரூபாயைப் பயன்படுத்தலாம்.
அனுமதிக்கப்பட்டுள்ள வங்கிகள்
பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கோட்டக் மஹிந்திரா, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி, ஹெச்எஸ்பிசி ஆகிய 9 வங்கிகளுக்கு சோதனை அடிப்படையிலான எண்ம ரூபாயின் பயன்பாட்டில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சில்லறை விலை எண்ம ரூபாயின் பயன்பாடு
சில்லறை வாடிக்கையாளா்களுக்கான எண்ம ரூபாயின் சோதனை பயன்பாடு நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் ஒரு மாதத்துக்குள் தொடங்கப்படவுள்ளது. இந்தச் சோதனைகளின் அடிப்படையில் எண்ம ரூபாயின் பயன்பாடு மேம்படுத்தப்பட்டு, முழு நேரப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளது.
ரூபாய்-எண்ம ரூபாய் பரிவா்த்தனை
நாம் தற்போது பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளைக் கொண்டு எண்ம ரூபாயைப் பரிமாறிக் கொள்ள முடியும். எண்ம ரூபாயானது ஆா்பிஐ-யின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதால், ரூபாயை வழக்கமாகப் பயன்படுத்துவதைப் போலவே எண்ம ரூபாயையும் பயன்படுத்த முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.