மாநிலங்களவையின் 9 குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்களை மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் மறுசீரமைத்துள்ளார். இதில், விதிமுறைகள் குழுவில் இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி. உள்ளிட்ட 15 பேர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் மாநிலங்களவையின் நெறிமுறைகள் குழுவின் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரும், உறுதிமொழிக் குழுத் தலைவராக அதிமுக உறுப்பினர் தம்பிதுரையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஜகதீப் தன்கர் குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மாநிலங்களவைக்கும் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில், முதன் முறையாக தன்கர் மாநிலங்களவையில் தலைவராக அமர இருக்கிறார்.
தன்கர் பொறுப்பேற்றுக் கொண்டது முதல் மாநிலங்களவையின் பல்வேறு நிலைக் குழுக்களை மறுசீரமைத்து வருகிறார். மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் துறைரீதியாக பொதுவான நிலைக் குழுக்களும், தனித்தனியாக நிலைக் குழுக்களும் உண்டு. இருப்பினும், துறைரீதியான நிலைக் குழுக்களின் சிலவற்றின் தலைவர்கள் மாநிலங்களவைத் தலைவராலும், சில குழுக்களின் தலைவர்கள் மக்களவைத் தலைவராலும் நியமிக்கப்படுகின்றனர்.
இதில் மாநிலங்களவை நெறிமுறைகள் குழுத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக உறுப்பினருமான பிரகாஷ் ஜாவடேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதில் ஜெய்ராம் ரமேஷ் (காங்கிரஸ்), டெரிக் ஓ பிரையன் (திரிணமூல் காங்கிரஸ் ), திருச்சி சிவா (திமுக), சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி) உள்ளிட்ட 9 பேர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
மாநிலங்களவையின் அன்றாட அலுவல் ஆய்வுக் குழுவின் தலைவராக மாநிலங்களவைத் தலைவரே திகழ்கிறார். 10 உறுப்பினர்கள் கொண்ட இந்தக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக கட்சிகள் இடம்பெறவில்லை. மாநிலங்களவையின் உரிமைக் குழு, விதிமுறைகளுக்கான குழுக்களும் மாற்றியமைக்கப்பட்டு இந்த இரண்டுக்கும் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் சிங்கே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். உரிமைக் குழுவில் ஜிவிஎல் நரசிம்மராவ் (பாஜக), ஜி.கே.வாசன்(தமாகா) உள்ளிட்ட 10 பேரும், விதிகளுக்கான குழுவில் என்.ஆர்.இளங்கோ (திமுக) நியமன உறுப்பினர் இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட 15 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
10 பேர் கொண்ட அரசு உறுதிமொழிக் குழுத் தலைவராக அதிமுக உறுப்பினர் தம்பிதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹவுசிங் குழுவுக்கு ஆந்திர மாநில தொழிலதிபரும், பாஜக உறுப்பினருமான சி.எம் ரமேஷும், துணை சட்டக்குழுத் தலைவராக பாஜக தலைமை கொறாடா லக்ஷமிகாந்த் பாஜ்பாயும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல பிற குழுக்களின் தலைவர்கள் உறுப்பினர்கள் மாற்றியமைக்கப்பட்டு மாநிலங்களவையில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.