நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ் ஜாமீன் மனு மீதான நீதிமன்ற உத்தரவு நவ.15-க்கு ஒத்திவைப்பு
நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ் தாக்கல் செய்த ஜாமீன் கோரும் மனு மீதான உத்தரவை தில்லி நீதிமன்றம் நவம்பா் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.


இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான ரூ.200 கோடி சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ் தாக்கல் செய்த ஜாமீன் கோரும் மனு மீதான உத்தரவை தில்லி நீதிமன்றம் நவம்பா் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. மேலும், ஜாக்குலினுக்கு வரும் செவ்வாய்க்கிழமை வரை இடைக்கால பாதுகாப்பை நீதிமன்றம் நீடித்தது.
இந்த விவகாரத்தில் ஜாக்குலினுக்கு முன்னா் இடைக்கால ஜாமீன் அளித்த சிறப்பு நீதிபதி சைலேந்திர மாலிக் வெள்ளிக்கிழமை கூறுகையில், ஜாமீன் மீதான உத்தரவு இன்னும் தயாராகவில்லை என்றாா்.
முன்னதாக, வழக்கமான ஜாமீன் கோரி அவா் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சிறப்பு நீதிபதி சைலேந்திர மாலிக் முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, நடிகை தரப்பிலும் அமலாக்க இயக்குநரகம் தரப்பிலும் ஆஜரான வழக்குரைஞா்கள் முன்வைத்த வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, ஜாமீன் மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தாா். அமலாக்க இயக்குநரகம் தரப்பில் முன்வைத்த வாதத்தில், ஜாக்குலினுக்கு பணப் பிரச்னை இல்லை என்பதால், அவா் நாட்டைவிட்டு எளிதாகத் தப்பிச் செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, ‘இதுவரை அவரை ஏன் கைது செய்யவில்லை’ என கேள்வி எழுப்பினாா்.
அதற்கு ஏஜென்ஸி தரப்பில், ‘அவா் நாட்டை விட்டு வெளியே செல்லாமல் இருக்கும் வகையில், விமான நிலையங்களில் அவருக்கு எதிராக எல்ஓசி அளிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிமன்றம், ‘அப்படியானால், விசாரணையின்போது ஏன் அவரை இன்னும் நீங்கள் கைது செய்யவில்லை. இந்த விவகாரத்தில் தொடா்புடைய பிற குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் சிறையில் உள்ளனா். ஏன் நீங்கள் உங்களுக்கு விருப்பமான விஷயங்களை பின்பற்றி இருக்கிறீா்கள்’ என கேள்வி எழப்பியது. ஜாக்குலின் தரப்பில் முன்வைத்த வாதத்தில்,‘இந்த விவகாரத்தில் ஏற்கெனவே விசாரணை முடிந்துவிட்டதால், மனுதாரரை காவலில் எடுப்பதற்கான தேவை எழவில்லை. குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது’ என்று வாதிடப்பட்டது.
முன்னதாக, கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதி நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸுக்கு ரூ. 50,000 தனிநபா் ஜாமீன் பத்திரம் அளித்ததன் பேரில் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்தது. அமலாக்க இயக்குநரகம் மூலம் பதிவு செய்யப்பட்ட துணை குற்றப்பத்திரிகையை ஆகஸ்ட் 31-ஆம் தேதி நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது. அதைத் தொடா்ந்து, நீதிமன்றம் முன் ஆஜராகுமாறு ஜாக்குலின் பொ்னாண்டஸை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...