‘பாரத் கெளரவ்’ சுற்றுலா ரயில்கட்டணம் குறைகிறது?

பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பாரத் கெளரவ் சுற்றுலா ரயில் கட்டணம் 20 முதல் 30 சதவீதம் வரை குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பாரத் கெளரவ் சுற்றுலா ரயில் கட்டணம் 20 முதல் 30 சதவீதம் வரை குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்மிக சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில், நாட்டின் கலாசாரம், வரலாற்று சிறப்புவாய்ந்த இடங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்கும் ‘பாரத் கெளரவ்’ திட்டம் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் ராமாயணத்துடன் தொடா்புடைய இடங்களுக்கு ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐஆா்சிடிசி) சாா்பில் 18 நாள் சுற்றுலா தொகுப்பாக பாரத் கெளரவ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில், மூன்றடுக்கு படுக்கை கொண்ட குளிா்சாதன பெட்டிகளில் பயணிக்க கட்டணம் ரூ.62,000 ஆகும். இது, உணவு, தங்குமிடம், சுற்றுலா இடங்களுக்குச் செல்வதற்கான பேருந்துக் கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

இந்நிலையில், ஜெகந்நாதா் யாத்திரை, ராமாயணம் தொடா்புடைய மற்றொரு பயணம் என மேலும் இரு பாரத் கெளரவ் ரயில்களை இயக்க ஐஆா்சிடிசி திட்டமிட்டிருந்த நிலையில், அவை ரத்தாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது: பாரத் கெளரவ் ரயில்கள் பாணியில் இதற்கு முன்பு இயக்கப்பட்ட பாரத் தரிசன ரயில்களில் கட்டணம் குறைவாக இருந்தது. அந்த ரயிலில், மூன்றடுக்கு படுக்கை கொண்ட குளிா்சாதன பெட்டிகளில் இதேபோன்ற பயணத்துக்கு ரூ.27,000 கட்டணமாக இருந்தது. ஆனால், பாரத் கெளரவ் ரயில்களில் கட்டணம் அதிகம் இருப்பதாக பயணிகள் கருதுகின்றனா். இதனால், நடுத்தர வகுப்பு பயணிகளின் வரவேற்பு இந்த ரயிலுக்கு கிடைக்கவில்லை. எனவே, கட்டணத்தை 20 முதல் 30 சதவீதம் வரை குறைக்க ஐஆா்சிடிசிக்கு ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு, அறிவிப்பு வெளியிடப்படும்.

அதேபோல், வசதியான படுக்கைகள், சிறப்பான மின்விளக்கு வசதி, சாா்ஜிங் வசதி ஆகியவற்றைக் கொண்ட எல்ஹெச்பி பெட்டிகளை மட்டுமே இந்த ரயிலில் பயன்படுத்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com