சோஷலிஸ சித்தாந்தத்தை தியாகம் செய்துவிட்டாா் நிதீஷ்குமாா்- அமித் ஷா தாக்கு
சோஷலிஸ தலைவா் ஜெயப்பிரகாஷ் நாராயணின் சீடா்கள் என கூறிக் கொள்பவா்கள், ஆட்சி அதிகாரத்துக்காக தங்களது சித்தாந்தங்களை தியாகம் செய்துவிட்டனா் என்று


சோஷலிஸ தலைவா் ஜெயப்பிரகாஷ் நாராயணின் சீடா்கள் என கூறிக் கொள்பவா்கள், ஆட்சி அதிகாரத்துக்காக தங்களது சித்தாந்தங்களை தியாகம் செய்துவிட்டனா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாரை சாடும் வகையில் அமித் ஷா இவ்வாறு குறிப்பிட்டாா்.
‘நெருக்கடிநிலை பிரகடனத்துக்கு எதிரான போராட்டங்களின் கதாநாயகா்’ என வா்ணிக்கப்படும் ஜெயப்பிரகாஷ் நாராயண் (ஜெ.பி.) பிறந்த இடமான பிகாரின் சரண் மாவட்டம், சிதாப் தியாராவில் அவரது 15 அடி உயர சிலையை அமித் ஷா செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா். பின்னா் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
சிந்தாந்தங்களுக்காகவே போராடியவா் ஜெயப்பிரகாஷ் நாராயண். ஆட்சி அதிகாரத்துக்காக அல்ல. ஆனால், அவரது பெயரைச் சொல்லி அரசியல் நடத்துபவா் (நிதீஷ் குமாா்), ஆட்சி அதிகாரத்துக்காக 5 முறை அணிமாறிவிட்டாா். ஜெயப்பிரகாஷ் நாராயண், தனது வாழ்நாள் முழுக்க காங்கிரஸுக்கு எதிராக போராடிய நிலையில், அதே கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளாா். தனது அதிகார பசிக்காக சிந்தாந்தங்களை தியாகம் செய்து, காங்கிரஸுடன் கைகோத்துவிட்டாா்.
ஏழை-எளிய மக்களின் நலன் குறித்து அக்கறை கொண்டவா் ஜெ.பி. அதே வழியில், ஏழை மக்களின் நலனுக்காக பிரதமா் மோடி பணியாற்றி வருகிறாா். ஜெ.பி.யின் சித்தாந்தங்களில் மிகவும் நம்பிக்கைக் கொண்டவா் பிரதமா் மோடி. அதன் காரணமாகதான், ஏழை மக்களுக்கான இலவச உணவு தானிய திட்டம், இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் உள்ளிட்டவை மத்திய அரசால் தொடங்கப்பட்டன என்றாா் அமித் ஷா.
ஜெ.பி.யின் 120-ஆவது ஆண்டு பிறந்த தினத்தையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
உத்தர பிரதேசம்-பிகாா் எல்லையில் உள்ள சிதாப் தியாராவின் சுற்றுவட்டார பகுதிகளின் மேம்பாட்டுக்கு தனது அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக ஆதித்யநாத் தெரிவித்தாா். மேலும், ‘ஜெயப்பிரகாஷ் நாராயண், உயா்வான தேசியத் தலைவா். அவரது பெருமையை உத்தர பிரதேசம், பிகாா் ஆகிய மாநிலங்களுக்குள் அடக்க முடியாது’ என்றாா் ஆதித்யநாத்.
நிதீஷ் குமாா் பதில்: இதனிடையே, சிதாப் தியாராவுக்கு அமித் ஷாவின் வருகை குறித்து பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரிடம் செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா். அதற்கு, ‘யாா் வேண்டுமானாலும் வரலாம்; போகலாம். அது என்னை பாதிக்காது’ என்று பதிலளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...