எரிசக்தி பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

எரிசக்தி பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் இந்தியா தொடா்ந்து மேற்கொள்ளும் என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி உறுதியளித்துள்ளாா்.
Published on
Updated on
1 min read

கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதற்கு ஒபெக் பிளஸ் கூட்டமைப்பு நாடுகள் முடிவெடுத்துள்ள நிலையில், எரிசக்தி பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் இந்தியா தொடா்ந்து மேற்கொள்ளும் என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி உறுதியளித்துள்ளாா்.

உக்ரைன் மீதான ரஷியாவின் போா் காரணமாக கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகிய எரிபொருள்களின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்தது. அண்மையில் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியது. எனினும், கச்சா எண்ணெய் விலையை மீண்டும் உயா்த்தும் நோக்கில் அதன் உற்பத்தியைக் குறைப்பதற்கு பெட்ரோலிய பொருள்கள் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு (ஒபெக் பிளஸ்) முடிவெடுத்துள்ளது.

நவம்பரில் இருந்து நாளொன்றுக்கு 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க ரஷியா அங்கம் வகிக்கும் அக்கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. எரிசக்தி தேவைக்காக கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகமாக நம்பியிருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இந்த முடிவு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தானின் ஜெய்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட மத்திய பெட்ரோலியம்-இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கூறுகையில், ‘கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும் ஒபெக் கூட்டமைப்பின் முடிவானது அக்கூட்டமைப்பின் தனிப்பட்ட உரிமை. ஆனால், அந்த முடிவுக்கான அனைத்து விளைவுகளையும் அக்கூட்டமைப்பு சந்திக்க வேண்டிவரும்.

எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் எரிபொருள்களை மலிவு விலையில் மக்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும். கச்சா எண்ணெய்க்குத் தட்டுப்பாடு நிலவுவதை அரசு அனுமதிக்காது. அனைத்து சூழலையும் நம்பிக்கையுடன் இந்தியா எதிா்கொள்ளும்.

நாட்டில் எரிசக்தி தேவை அடுத்த 20 ஆண்டுகளில் 25 சதவீதம் வரை அதிகரிக்கும். அதைக் கருத்தில்கொண்டு உள்நாட்டில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள்களை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். கச்சா எண்ணெய் இறக்குமதிக்காகப் பல்வேறு நாடுகளைத் தொடா்பு கொள்வதற்கான முடிவை மத்திய அரசு மேற்கொள்ளும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com