
ரேவா: தீபாவளி என்பதே கனவாகிவிட்டதாக, மத்தியப் பிரதேசத்தில் நேரிட்ட பேருந்து விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பிய கூலித் தொழிலாளி சுபாஷ் சௌதரி கூறுகிறார்.
உத்தரப்பிரதேசத்துக்கு தீபாவளியைக் கொண்டாட படுக்கை வசதி கொண்ட பேருந்தில் சென்ற சுபாஷ் சௌதரி, நன்கு உறக்கத்தில் இருந்தார். கனவில் தான் கொண்டாடச் செல்லும் தீபாவளிப் பண்டிகையைப் பற்றிய நிகழ்வுகள்தான்.
ஆனால், மிகப் பயங்கர சப்தம் கேட்டு கண்விழித்தவருக்கு தனது கனவு கனவாகவே போய்விட்டதை அறிந்தார். தன்னைச் சுற்றிலும் ஏராளமானோர் ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து என்ன நடந்தது என்று யோசிக்கும் திறனைக்கூட இழந்தார்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா பகுதியில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 15 பேர் பலியாகினர். 40 பேர் காயமடைந்தனர். சுபாஷுக்கும் கையிலும் கால்களிலும் காயங்கள் ஏற்பட்டன. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து நடந்த போது பலரும், கடவுளே காப்பாற்று என்று கத்தினார்கள். சிலர் அசையாமல் கிடந்தனர். சிலர் தனது இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருந்தனர். சிலர் மயங்கிக் கிடந்தனர். மருத்துவமனைகளில்தான் கண்விழித்துப் பார்த்தனர்.
விபத்தில் பலியானவர்களும் காயமடைந்தவர்களும் பெரும்பாலும் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றிவரும் தொழிலாளிகள், தீபாவளி கொண்டாட உத்தரப்பிரதேசத்துக்குத் திரும்பும் போது விபத்தில் சிக்கியுள்ளனர் என்று காவல்துறை தெரிவிக்கிறது.
இதையும் படிக்க.. நீங்கள் ரொம்ப கண்டிப்பான பெற்றோரா? நல்லதுக்கு இல்லைங்க!
தெலங்கானாவின் ஹைதராபாத் நகரில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் சுஹாகி பஹரி பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர். அவர்களில் 20 பேர் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
பேருந்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.