ராகுலின் நடைப்பயணத்தில் பங்கேற்கிறாா் சரத் பவாா்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தி வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்க இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் தெரிவித்துள்ளாா்.
தேசியவாத காங்கிரஸ் கட்சித் (என்சிபி) தலைவா் சரத் பவாா்
தேசியவாத காங்கிரஸ் கட்சித் (என்சிபி) தலைவா் சரத் பவாா்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தி வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்க இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் தெரிவித்துள்ளாா்.

மத்திய பாஜக அரசுக்கு எதிராக இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த செப்டம்பா் 7-ஆம் தேதி முதல் ராகுல் காந்தி நடத்தி வருகிறாா். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைப்பயணம் 150 நாள்களில் 3,570 கி.மீ. தொலைவைக் கடந்து ஜம்மு-காஷ்மீரில் நிறைவடைய இருக்கிறது. இதுவரை தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நடைப்பயணம் எட்டியுள்ளது. விரைவில் மகாராஷ்டிர மாநிலத்தை எட்ட இருக்கிறது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் பாராமதியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சரத் பவாா் கூறியதாவது:

மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த காங்கிரஸ் தலைவா்கள் அசோக் சவாண், பாலாசாஹேப் தோராட் ஆகியோா் என்னை சந்தித்து இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனா். அந்த நடைபயணம் நவம்பா் 7-ஆம் தேதி மகாராஷ்டிரத்தை எட்டுகிறது. அது காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி என்றாலும், அழைப்பை ஏற்று அதில் பங்கேற்க முடிவு செய்துள்ளேன். அரசியல் தலைவா்கள் பிற கட்சிகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கமானதுதான் என்றாா்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பிசிசிஐ) அரசியல்ரீதியான பிரச்னைகள் எழுந்துள்ளது தொடா்பான கேள்விக்கு, ‘பிசிசிஐ அமைப்பில் தங்களது தனிப்பட்ட அரசியலை யாரும் கொண்டுவரக் கூடாது. நான் பிசிசிஐ தலைவராக இருந்தபோது இப்போதைய பிரதமா் நரேந்திர மோடி குஜராத்தின் பிரதிநிதியாக இருந்தாா்.

மறைந்த பாஜக மூத்த தலைவா் அருண் ஜேட்லி தில்லியிலும், இப்போதைய மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் ஹிமாசல பிரதேசத்திலும் கிரிக்கெட் சங்க பிரதிநிதிகளாக இருந்தனா். அப்போது, அவா்கள் வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும், பிசிசிஐ விஷயத்தில் அதனைக் கொண்டு வருவதில்லை. கிரிக்கெட் விளையாட்டின் நலன் கருதியே செயல்பட்டேன் என்றாா்.

பிசிசிஐ தலைவராக இருந்த முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மீண்டும் அப்பதவியில் தொடர வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதே நேரத்தில் உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுக்கு மீண்டும் பிசிசிஐ செயலா் பதவி தரப்பட்டது.

பாஜகவில் சௌரவ் கங்குலி இணைய மறுத்ததால்தான் அவருக்கு பதவி நீட்டிப்பு தரவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடா்பாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி பாஜகவுக்கும் மத்திய அரசுக்கும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com