இந்தியா ஒருபோதும் போரை முதல் விருப்பமாக பார்த்ததில்லை: பிரதமர் மோடி பேச்சு

இந்தியா ஒருபோதும் போரை முதல் விருப்பமாக பார்த்ததில்லை: பிரதமர் மோடி பேச்சு

இந்தியா ஒருபோதும் போரை முதல் விருப்பமாக பார்த்ததில்லை. அதை எப்போதும் இறுதி முயற்சியாக ஒத்திவைக்கவே முயற்சிக்கிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 
Published on


புது தில்லி: கார்கில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ஒருபோதும் போரை முதல் விருப்பமாக பார்த்ததில்லை. அதை எப்போதும் இறுதி முயற்சியாக ஒத்திவைக்கவே முயற்சிக்கிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 

நாடு முழுவதும் தீபாவளி திருநாள் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அதிகாலையே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து, நண்பர்கள், உறவினர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து, கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஆண்டு தோறும் தீபாவளி திருநாளை எல்லையில் பணிபுரியும் நமது ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளி நாளன்று பல்வேறு ராணுவ தளங்களுக்கு சென்று நமது ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார். 

அந்த வகையில், இந்தாண்டும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவதற்காக  திங்கள்கிழமை காலை கார்கில் வந்த பிரதமர் நரேந்திர மோடி, லடாக் எல்லையில் உள்ள கார்கில் ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை தன் கையால் ஊட்டிவிட்டும் வழங்கியும் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தார். 

பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட தீபாவளி கொண்டாட்டத்தில், ஆயுதப்படைவீரர்கள் 'வந்தே மாதரம்'  'பாரத் மாதா கி ஜெய்' என்கிற முழக்கங்களை எழுப்பினர்.

கார்கில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை தன் கையால் ஊட்டிவிடும் பிரதமர் மோடி

பின்னர் கார்கில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி பேசுகையில், தீபாவளி என்றால் 'பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டும் பண்டிகை' மற்றும் கார்கில் அதை சாத்தியமாக்கியது. 

வெற்றி பெற்ற இந்த கார்கில் மண்ணிலிருந்து, நாட்டு மக்களுக்கும், உலக மக்களுக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துகள். கார்கில் போரில் வெற்றிக் கொடியை ஏற்றாத பாகிஸ்தானுடன் ஒரு போர் கூட நடந்ததில்லை. 

"கார்கில் ராணுவம், பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணை நசுக்கியது, நாட்டு மக்கள் அன்று கொண்டாடிய தீபாவளியை இன்றுவரை  நினைவில் கொண்டுள்ளனர்." 

"என்னைப் பொறுத்தவரை, நீங்கள் அனைவரும் பல ஆண்டுகளாக எனது குடும்பத்தில் ஒருவராக இருக்கிறீர்கள்... உங்கள் அனைவருக்கும் மத்தியில் தீபாவளியைக் கொண்டாடுவது எனக்கு கிடைத்த பாக்கியம்" என்று மோடி கூறினார்.

ஒரு தேசத்தின் எல்லைகள் பாதுகாப்பாகவும், பொருளாதாரம் வலுவானதாகவும், நம்பிக்கை நிறைந்த சமூகமாகவும் இருக்குமபோதுதான் அந்த தேசம் பாதுகாப்பாக இருக்கும். 
 
நாங்கள் போரை முதல் விருப்பமாக  பார்த்ததில்லை... இலங்கையில் நடந்த போராக இருந்தாலும் சரி, குருக்ஷேத்திரத்தில் நடந்த போராக இருந்தாலும் சரி, அதை எப்போதும் இறுதி முயற்சியாக ஒத்திவைக்கவே முயற்சிக்கிறோம். நாங்கள் போருக்கு எதிரானவர்கள். ஆனால், வலிமை இல்லாமல் அமைதியை அடைய முடியாது. யாரேனும் நம்மை தீய நோக்கத்தோடு பார்க்கத் துணிந்தால், நமது முப்படை வீரர்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். 

புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்புரகளை மேம்படுத்துவது, பாதுகாப்பு படைகளில் பெண்களுக்கு பணி அளிப்பது போன்ற சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. 

கார்கில் ராணுவ வீரர்களுடன் நரேந்திர மோடி

400-க்கும் மேற்பட்ட வகை பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்யாமல், மாறாக இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கு முடிவு செய்த 3 ஆயுதப்படைகளையும் பாராட்டுகிறேன். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுடன் நமது வீரர்கள் சண்டையிடும் போது, எதிரிகளை தோற்கடித்த பெருமை மட்டுமல்ல, ஆச்சரியமும் கூடும் என்றார்.

நமது எல்லைகளை ஆயுதப்படைகள் பாதுகாப்பதால் தான், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நிம்மதியாக உறங்குகிறார்கள். இந்தியாவின் ஆயுதப் படைகளின் வீரர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். உங்களின் தியாகங்கள் நம் நாட்டை எப்போதும் பெருமைப்படுத்துகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

2014 ஆம் சியாச்சின் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன், 2015 இல் பஞ்சாப் எல்லை உள்ள ராணுவ வீரர்களுடன், 2016 இல் ஹிமாச்சலபிரதேச எல்லை ராணுவ வீரர்களுடன், 2017 இல் ஜம்மு-காஷ்மீர் எல்லை வீர்ரகளுடன், 2018 இல் உத்தரகாண்ட் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன், 2019 இல் ஜம்மு-காஷ்மீர் ராணுவ வீரர்களுடனும், 2020 இல் ராஜஸ்தான் எல்லை ராணுவ வீரர்களுடனும், 2021 இல் ஜம்மு-காஷ்மீர் பகுதி ராணுவ வீரர்களுடனும் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார் பிரதமர் நரேந்திர மோடி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்