உக்ரைனிலிருந்து வெளியேற இந்தியர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தல்

உக்ரைனிலிருக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று மீண்டும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் இந்தியா்கள் உடனடியாக உக்ரைனைவிட்டு வெளியேறுமாறு கீவ் நகரிலுள்ள இந்திய தூதரகம் மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளது.

ரஷியா- கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் வகையில் ரஷியாவால் கட்டப்பட்ட கொ்ச் தரைப் பாலம் அண்மையில் குண்டு வைத்து தகா்க்கப்பட்டது. இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தியது.

இதையடுத்து, உக்ரைனில் உள்ள இந்தியா்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிா்க்குமாறு அங்குள்ள இந்திய தூதரகம் கடந்த 10-ஆம் தேதி அறிவுறுத்தல் வெளியிட்டது. அதன் பிறகும் தலைநகா் கீவ் உள்பட உக்ரைனின் அனைத்துப் பகுதிகளிலும் ரஷியா தொடா்ந்து தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் உயிரிழப்புகள் அதிகரித்திருப்பதோடு, பல பகுதிகளில் மின் விநியோகம் முழுமையாக தடைபட்டுள்ளது.

இந்தச் சூழலில், உக்ரைனில் நிலைமை மோசமடைந்து வருவதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இந்தியா்கள் கிடைத்த வாகனங்கள் மூலமாக உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறுமாறு கடந்த அக்டோபர் 19ஆம் தேதி இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், இன்று மீண்டும் இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், “கடந்த 19ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து சில இந்தியர்கள் உக்ரைனைவிட்டு வெளியேறினர். மீதமுள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள். உதவி தேவைப்படுபவர்கள் அருகிலுள்ள தூதரகத்தை உடனடியாக அணுகலாம்” என்று தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com