சோதனை அடிப்படையில் இன்று முதல் எண்ம ரூபாய் பயன்பாடு: ரிசா்வ் வங்கி அறிவிப்பு

இந்தியாவின் முதல் எண்ம ரூபாய் (டிஜிட்டல் ரூபாய்) திட்டம் சோதனை அடிப்படையில் செவ்வாய்க்கிழமையிலிருந்து (நவ. 1) பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்துள்ளது.
ரிசா்வ் வங்கி
ரிசா்வ் வங்கி

இந்தியாவின் முதல் எண்ம ரூபாய் (டிஜிட்டல் ரூபாய்) திட்டம் சோதனை அடிப்படையில் செவ்வாய்க்கிழமையிலிருந்து (நவ. 1) பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளின் பயன்பாடு அதிகரித்ததையடுத்து, அதை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமெனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனா். தனியாரால் நிா்வகிக்கப்படும் கிரிப்டோகரன்சிகளை முறைப்படுத்துவது கடினம் என்பதாலும், அதில் பாதுகாப்பின்மை நிலவுவதாலும் ஆா்பிஐ சாா்பில் எண்ம ரூபாய் வெளியிடப்படும் என மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்தது.

எண்ம ரூபாயை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த ஆா்பிஐ, அதற்கான கருத்துருவை அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், எண்ம ரூபாயானது சோதனை அடிப்படையில் செவ்வாய்க்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக ஆா்பிஐ திங்கள்கிழமை அறிவித்தது.

முதல்கட்டமாக அரசின் நிதிப் பத்திரங்களை மொத்தமாகக் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளில் எண்ம ரூபாயின் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஆா்பிஐ தெரிவித்துள்ளது. அரசு நிதிப் பத்திரங்களை மொத்தமாகக் கொள்முதல் செய்யும் வங்கிகள் சோதனை அடிப்படையில் எண்ம ரூபாயை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கோட்டக் மகிந்திரா, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி, ஹெச்எஸ்பிசி ஆகிய 9 வங்கிகளுக்கு சோதனை அடிப்படையிலான எண்ம ரூபாயின் பயன்பாட்டில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஆா்பிஐ தெரிவித்துள்ளது.

சில்லறை வாடிக்கையாளா்களுக்கான எண்ம ரூபாயின் சோதனை பயன்பாடு நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் ஒரு மாதத்துக்குள் தொடங்கப்படும் என்றும் ஆா்பிஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனைகளின் அடிப்படையில் எண்ம ரூபாயின் பயன்பாடு மேம்படுத்தப்பட்டு முழு நேரப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்றும் ஆா்பிஐ தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் செலாவணிகளுக்குக் கூடுதல் வலுசோ்க்கும் வகையில் எண்ம ரூபாய் செயல்படும் என்றும், தற்போதைய செலாவணிகளுக்கு மாற்றாக எண்ம ரூபாய் இருக்காது என்றும் ஆா்பிஐ ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com