
கோராபுட்: தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கமலா பூஜாரியை நடனமாட வைத்து விடியோ எடுத்த சமூக ஆர்வலர் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கமலா பூஜாரி கடந்த 2019ஆம் ஆண்டு இயற்கை விவசாய முறையை ஊக்குவித்தமைக்காக பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஒடிசா மாநிலத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்குமே பெருமை சேர்த்தவர் கமலா பூஜாரி. அவர் எங்கள் ஒட்டுமொத்த சமுதாயத்தின் முன்னோடி. தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அவரை இவ்வாறு கட்டாயப்படுத்தி நடனமாட வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது, அதற்கு நாங்கள் கடுமையாக கண்டனத்தைப் பதிவு செய்கிறோம். இதுகுறித்து விசாரணை நடத்தி, சமூக ஆர்வலர் மீதுநடவடிக்கை எடுக்க மாநிலஅரசை வலியுறுத்துகிறோம். இல்லையென்றால் அனைத்துப் பழங்குடியின மக்களும் சாலையில் அமர்ந்து போராடுவோம் என்று புமியா அமைப்பின் தலைவர் நரேந்திர கண்டோலியா கூறியுள்ளார்.
இதையும் படிக்க.. பொய்யாக பாஜக பகிர்ந்த விடியோ.. பழனிவேல் தியாகராஜன் கிண்டல்
கட்டக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கமலா பூஜாரி, ஒரு சமூக ஆர்வலருடன் இணைந்து நடனமாடும்படிக் கூறப்படுகிறார். அதற்கு அவரும் நடனமாடுகிறார். இந்த விடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து விசாரணை நடத்த மருத்துவமனை நிர்வாகமும் உத்தரவிட்டுள்ளது.