காங்கிரஸுடன் திமுக இல்லாவிட்டால் 2014 நிலைதான்...: கார்த்தி சிதம்பரம்

தமிழகத்தின் இளைய தலைமுறை அரசியல் தலைவர்களில் கார்த்தி சிதம்பரம் குறிப்பிடத்தக்கவர்.
கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

தமிழகத்தின் இளைய தலைமுறை அரசியல் தலைவர்களில் கார்த்தி 
சிதம்பரம் குறிப்பிடத்தக்கவர். 50 வயதான சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினரான இந்த கதர் சட்டைக்காரர், மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் குடும்ப வாரிசு மட்டுமல்ல, அரசியல் வாரிசும்கூட.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துத் தேறிய கார்த்தி சிதம்பரம் அரசியல்வாதி மட்டுமல்ல, தொழிலதிபரும்கூட. வெளிப்படையாகத் தனது மனதில்பட்ட கருத்துகளை வெளிப்படுத்தும் கார்த்தி சிதம்பரத்தின் பலம் அவரின் துணிச்சல்; பலவீனம்-முதல்வர் 
மு.க.ஸ்டாலினைப் போலவே, ஆளுமைமிக்க தந்தையுடன் ஒப்பிடப்படுதல்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் இன்றைய தேசிய, மாநில அரசியல் நிலவரம் குறித்து "தினமணி' நிருபர் பீ.ஜெபலின் ஜானுக்கு  அளித்த பேட்டி: 

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் குறித்து தங்கள் கருத்து என்ன?

""தமிழகம், கேரளத்தில் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் எழுச்சியை காண முடிந்தது. மக்களைத் தேடி கட்சி செல்வது கட்சிக்கு வலுசேர்க்கும்.  மக்களின் மனநிலையை கட்சி நேரடியாக புரிந்துகொள்ள முடியும்.''

காங்கிரஸ் வலுவாக இருக்கும் பகுதிகளில் மட்டுமே ராகுல் காந்தி நடைப்பயணம் செல்கிறார் என்ற விமர்சனம் உள்ளதே?

""நடைப்பயண திட்டத்தை வகுக்கும் இடத்தில் நான் இருந்திருந்தால் அதை வேறுமாதிரியாக வடிவமைத்திருப்பேன். 150 நாள்கள் நடைப்பயணம் செல்லும்போது ஒரு நாளைக்கு 2 மக்களவைத் தொகுதிகளிலாவது ராகுல் காந்தியின் கால் பதியும் வகையில் நடைப்பயணத்தை திட்டமிட்டிருப்பேன். இருந்தாலும், இந்த நடைப்பயணம் என்பது நல்ல முயற்சி.''

கேரளத்தில் அதிக நாள்கள் ராகுல் நடைப்பயணம் செய்வதை 
இடதுசாரிகள் விமர்சனம்  செய்துள்ளார்களே?

"அங்கு ஆட்சியில் அமர காங்கிரஸ்-இடதுசாரிகள் இடையே போட்டி இருப்பதால்தான் இந்த அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் எடுத்துள்ள சிறு முயற்சிதான் இந்த நடைப்பயணம் என்பதை இடதுசாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.''

காங்கிரஸ் வலுவாக உள்ள உத்தரகண்ட், கோவா மாநிலங்களில் கூட 2-ஆவது முறையாக பாஜக ஆட்சியை தொடர்ந்த நிலையில், தேசிய அளவில் பாஜகவுக்கு மாற்று என்ற அந்தஸ்தை காங்கிரஸ் இழந்துவிட்டது போன்ற தோற்றம் உருவாகியுள்ளதே?

""பாஜக பெரிய வெற்றியை பெற்றிருப்பது உண்மைதான். மாநிலத் தேர்தல் முடிவை வைத்து மக்களவைத் தேர்தல் முடிவை கணிக்க முடியாது. சரியான வியூகம், கூட்டணி அமைவதைப்  பொருத்துதான் வெற்றி, தோல்வி அமையும். எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து ஒரே நபரை முன்னிறுத்தி, சரியான மாற்றுக்கொள்கையை முன்வைத்தால் பாஜகவை வீழ்த்த முடியும்.''

பாஜக-காங்கிரஸ் நேரடியாக மோதும் 185 தொகுதிகளில் கணிசமான தொகுதிகளை காங்கிரஸ் வெற்றிபெறாமல் மோடியை எப்படி வீழ்த்த முடியும்?

""இது எனக்கும் புரிகிறது. புள்ளிவிவரங்களுடன் நான் சண்டை போட விரும்பவில்லை.''

நிதீஷ் குமார், மம்தா, கேஜரிவால் போன்றவர்களுக்கு கூட பிரதமராகும் ஆசை இருக்கும்போது காங்கிரஸ் அறிவிக்கும் பிரதமர் வேட்பாளரை அவர்கள் ஒப்புக்கொள்வார்களா?.

""நிதீஷ் குமார், மம்தா போன்றவர்களின் கட்சிகள் எல்லாம் ஒரு மாநிலக் கட்சிகள். கேஜரிவாலின் கட்சி வேண்டுமானால் ஒன்றரை மாநில கட்சியாக இருக்கலாம். ஒரு மாநில கட்சிகள், ஒன்றரை மாநில கட்சிகளால் பாஜகவை வீழ்த்த முடியாது. காங்கிரûஸ அச்சாணியாக வைத்துத்தான் பாஜகவுக்கு மாற்றாக கூட்டணியை அமைக்க முடியும். முதலில் கூட்டணியை அமைத்து, பாஜகவுக்கு  எதிராக மாற்று பிரசார உத்தியை வடிவமைக்க வேண்டும். அந்தக் கூட்டணி வெற்றி பெற்றால் யார் பிரதமர் என்பதை பின்னர் முடிவு செய்யலாம்.''

நேரு குடும்பத்தவர் தலைவராக இருப்பது குறித்து தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

""தலைவரை மையமாக வைத்து இவ்வளவு விவாதம் நடப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. கட்சியின் கட்டுமானம் வலுவாக இருப்பது அவசியம்.  ஒவ்வொரு பேரவைத் தொகுதி அளவில் கட்சியை வலுப்படுத்த வேண்டும். காங்கிரஸில் புதிய சீர்திருத்தம் தேவை. பெரும்பாலான தொண்டர்கள் நேரு குடும்பத்தில் இருந்துதான் கட்சித் தலைவர் வர வேண்டும் என விரும்புகின்றனர்.  அதையே மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.''

ஓராண்டு கடந்த திமுக ஆட்சியை எப்படி பார்க்கிறீர்கள்?

""தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிப்படைத் தன்மை உடையவராக,  சுறுசுறுப்பானவராக,  மக்கள் எளிதில் அணுகக்கூடிய, மக்களை அடிக்கடி சந்திக்கக்கூடிய முதல்வராக உள்ளார்.  அதற்காக அவரைப் பாராட்டுகிறேன். சர்வதேச அளவில் சென்னையை கொண்டுசெல்லும் வகையில் விளையாட்டுப் போட்டியை நடத்தியது, வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் முதலீடுகளை கொண்டுவந்தது, காலை சிற்றுண்டி திட்டத்தை அமல்படுத்தியது போன்றவை முழுமையாக வரவேற்கத்தக்கவை.''

மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றால் மக்களிடம் ஆட்சி மீது அதிருப்தி உருவாகியிருப்பதை உங்களால் உணர முடிகிறதா?

""தமிழக அரசின் நிதிநிலை வலுவாக இல்லை. தமிழ்நாடு மின்வாரியத்துக்கு ரூ.1.28 லட்சம் கோடி கடன் உள்ளது. இதை செலுத்தினால்தான் நிதிநிலை சீராகும்.  அதைச் சீரமைக்க  6 பக்கம் கொண்ட அறிக்கையை நான் வெளியிட்டுள்ளேன். இதுபோல பலரும் வெளியிட்டுள்ளனர்.  இதையெல்லாம் வைத்து மின்வாரியத்தை சரி செய்தால் கடன்சுமை குறையும்.

மின்கட்டணத்தை உயர்த்துவது மட்டுமே நிதிநிலையை சீரமைக்க தீர்வாகாது. சொத்து வரி நிதி ஆதாரத்தில்தான் உள்ளாட்சிகள் இயங்குகின்றன. சொத்துவரியை முறையாகப் பயன்படுத்தி உள்ளாட்சிகள் கட்டுமான வசதிகளை மேம்படுத்த வேண்டும். செலுத்தும் வரிக்கு ஏற்ப சேவை கிடைப்பதில்லை என்ற மக்களின் குறையை அரசு போக்க வேண்டும்.  நிலுவை வாடகையை முழுமையாக உள்ளாட்சிகள் வசூலிக்க வேண்டும்.''

மின் கட்டண உயர்வுக்கு மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டதுபோல, பிரதான கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆக்கபூர்வமாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

""தமிழகத்தில் ஆளும் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. ஆனால், அரசில் இடம்பெறவில்லை. தமிழகத்தைப் பொருத்தவரை காங்கிரஸ் ஆளும் கட்சியாகவும் இல்லாமல், எதிர்க்கட்சியாகவும் இல்லாமல் இரண்டும்கெட்டான் நிலையில் இருப்பதால்தான் முழுமையாகச் செயல்பட முடியவில்லை.''

2014 மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தனித்து நின்று 37 தொகுதிகளில் வெற்றிபெற்றதுபோல, 2024இல் காங்கிரஸை கழற்றிவிட்டு சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிக தொகுதிகளைக் கைப்பற்ற திமுக இப்போதே அரசியல் நகர்வை மேற்கொள்வதாக பேசப்படுகிறதே? 

""அப்படிச் செய்தால் 2014 மக்களவைத் தேர்தல் முடிவுதான் வரும் என்பது எல்லோருக்கும் தெரியும். திமுக}காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. சித்தாந்த ரீதியாக பாஜகவுக்கு எதிராக திமுக இருப்பதை முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். கூட்டணி வைத்தால்தான் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும்.''

காங்கிரஸ் இல்லாமல் மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற முடியுமா?

""காங்கிரஸ் இல்லாமல் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்றிருக்குமா? கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திப்பது என்பது விஷப்பரீட்சை.  நாங்கள் தெளிவாக இருக்கிறோம். கூட்டணியோடுதான் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கும். தமிழகத்தை பொருத்தவரை தேசிய அளவில் காங்கிரஸ் வெற்றிபெற வேண்டும் என்ற மனநிலையில்தான் மக்கள் வாக்களிக்கின்றனர். ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் கூட மக்களவை, பேரவைத் தேர்தல்களை ஆய்வு செய்துதான் மக்கள் வாக்களிக்கின்றனர்.''

அதிமுக பிளவில் யாருக்கு அதிக தொண்டர்கள் செல்வாக்கு உள்ளது?

"" அதிமுகவில் பிளவே இல்லை.  சில சலசலப்புகள் இருக்கும். பின்னர் எல்லோரும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். இரட்டை இலை முடங்கினால் முடிவு என்னவாகும் என்பதை அதிமுகவினர் 1989 பேரவைத் தேர்தலிலேயே பார்த்துவிட்டனர்.  அதிமுகவில் வெளிப்படையாக பார்த்தால் எடப்பாடி பழனிசாமிக்குதான் அதிக ஆதரவு உள்ளது.''

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com