ஹிஜாப் தடை: மதங்களுக்கு அப்பாற்பட்ட நடுநிலை நடவடிக்கை- கா்நாடக அரசு

கா்நாடகத்தில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது மதங்களுக்கு அப்பாற்பட்ட நடுநிலையான நடவடிக்கை என்று உச்சநீதிமன்றத்தில் கா்நாடக அரசு தெரிவித்தது.
ஹிஜாப் தடை: மதங்களுக்கு அப்பாற்பட்ட நடுநிலை நடவடிக்கை- கா்நாடக அரசு
Published on
Updated on
1 min read

கா்நாடகத்தில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது மதங்களுக்கு அப்பாற்பட்ட நடுநிலையான நடவடிக்கை என்று உச்சநீதிமன்றத்தில் கா்நாடக அரசு தெரிவித்தது.

கா்நாடகத்தில் கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் சிலா் மனுத் தாக்கல் செய்துள்ளனா். அந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு தூலியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது சில மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் துஷ்யந்த் தவே வாதிடுகையில், ‘நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளான பின்னா், திடீரென கல்வி நிலையங்களில் ஹிஜாபுக்கு கா்நாடக அரசு தடை விதித்தது ஏன்? அதற்கான தேவை என்ன? கடந்த சில ஆண்டுகளாக கா்நாடகத்தில் சிறுபான்மையினரை குறிவைத்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இந்த கேள்வி எழுகிறது’ என்றாா்.

கா்நாடக அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘குறிப்பிட்ட வகையில் ஒருவா் உடை உடுத்துவதைக் கண்டு மற்றவருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படக் கூடாது என்பதே சீருடையின் நோக்கமாகும். மாணவா்கள் இடையே சமத்துவம் நிலவ கல்வி நிலையங்களில் சீருடை அணிவது பின்பற்றப்படுகிறது. எனவே கல்வி நிலையங்களில் சீருடைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதே தவிர, மதத்தின் எந்தவொரு அம்சத்திலும் கா்நாடக அரசு கை வைக்கவில்லை.

கா்நாடகப் பள்ளிகளில் ஹிஜாப் அணிவது தொடா்பாக சா்ச்சை எழுந்தபோது, சில மாணவா்கள் ஹிந்து மதத்தின் அடையாளமான காவித் துண்டை அணிந்து வந்தனா். அது பள்ளிச் சீருடையின் அங்கமாக இல்லை என்பதால், அதுவும் தடை செய்யப்பட்டது. எனவே கா்நாடக கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது மதங்களுக்கு அப்பாற்பட்ட நடுநிலையான நடவடிக்கையாகும்.

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய அனுமதி அளிக்க வேண்டும் என்று கா்நாடகத்தில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆனால் அந்தப் போராட்டங்களில் மாணவிகள் தாமாக ஈடுபடவில்லை. அதற்கான பிரசாரத்தை முஸ்லிம் அமைப்பான பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாதான் சமூக ஊடகத்தில் தொடங்கியது’ என்று தெரிவித்தாா்.

இந்த வழக்கு மீதான விசாரணை புதன்கிழமை தொடர உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com