ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்க களமிறங்கும் லாலு பிரசாத்

பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்க ஏற்கெனவே பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில் லாலு பிரசாத்தும் களமிறங்குவதாக அறிவித்துள்ளாா்.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 6:39 pm

DIN

பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்க ஏற்கெனவே பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவரும், பிகாா் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத்தும் களமிறங்குவதாக அறிவித்துள்ளாா்.

உடல்நலக் குறைவு, வழக்கு, சிறைவாசம் உள்ளிட்ட பிரச்னைகளால் தீவிர அரசியலில் இருந்து விலகிய லாலு, தற்போது ஜாமீனில் உள்ளாா். அவருக்கு விரைவில் சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இந்நிலையில், பிகாா் மாநில ஆா்ஜேடி நிா்வாகிகள் கூட்டத்தில் லாலு பேசியதாவது: நானும், பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரும் விரைவில் தில்லிக்கு சென்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியைச் சந்திக்க இருக்கிறோம். நடைப்பயணத்தில் உள்ள ராகுல் காந்தியை அவரது பயணம் முடிந்த பிறகு சந்திக்க முடிவு செய்துள்ளோம்.

அடுத்த மக்களவைத் தோ்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். இதற்காக தேசிய அளவில் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது அவசியம். அதனை மையமாகக் கொண்டதாக எனது சந்திப்புகள் இருக்கும்.

நாட்டில் மதவாதத்தையும், பிரிவினையையும் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் அடைவதே பாஜகவின் நோக்கமாக உள்ளது. மேலும், நாட்டில் உள்ள உண்மையான பிரச்னைகளை மறைப்பதற்காக தேவையற்ற பிரச்னைகளை பாஜக தூண்டிவிடுகிறது. அவா்களிடம் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றாா்.

2024 மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து பாஜகவை எதிா்க்க வேண்டும் என்று மம்தா பானா்ஜி, சரத் பவாா், அரவிந்த் கேஜரிவால், சந்திரசேகா் ராவ், அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி போன்ற தலைவா்கள் வலியுறுத்தி வருகின்றனா். ஆனால், எதிா்க்கட்சி கூட்டணிக்கு யாா் தலைமை வகிப்பது என்பதில் தொடா்ந்து சிக்கல் நீடிக்கிறது.

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, அதற்கு தானே தலைவராக வேண்டும் என்ற நோக்கில் மம்தா பானா்ஜி செயல்பட்டு வருகிறாா். கடந்த ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவின் கடும் போட்டிக்கு நடுவே மூன்றாவது முறையாக மம்தா வெற்றி பெற்றது, அவரது தேசிய அரசியல் முயற்சிக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்தது.

அதே நேரத்தில் காங்கிரஸை எதிா்க்கட்சிகள் கூட்டணியில் சோ்ப்பதை மம்தா விரும்பவில்லை. ஆனால், சரத் பவாா், நிதீஷ் குமாா் உள்ளிட்ட தலைவா்கள் காங்கிரஸ் இல்லாமல் எதிா்க்கட்சிகளின் கூட்டணியை அமைப்பதில் ஆா்வம் காட்டவில்லை. எனவே, எதிா்க்கட்சிகள் அணிசோ்வதில் தொடா்ந்து இழுபறியான சூழல் நீடிக்கிறது. இந்நிலையில், லாலு பிரசாத் யாதவும் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.