பல்கலை.க்கு என்டிஆருக்குப் பதில் ஒய்எஸ்ஆர் பெயரா? மாற்றத்தை எதிர்க்கும் ஜெகனின் சகோதரி!

ஆந்திரத்தில் என்.டி.ஆர். பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றி ஒய்எஸ்ஆர் பெயரைச் சூட்டும் ஜெகன் மோகன் ரெட்டியின் முடிவுக்கு அவரது சகோதரி ஷர்மிளாவே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் அவரது சகோதரி ஷர்மிளா.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் அவரது சகோதரி ஷர்மிளா.
Published on
Updated on
2 min read

ஆந்திரத்தில் என்.டி.ஆர். பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றி ஒய்.எஸ்.ஆர். பெயரைச் சூட்டும், முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். மகனுமான ஜெகன் மோகன் ரெட்டியின் முடிவுக்கு அவரது சகோதரி ஷர்மிளா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ளது புகழ்பெற்ற என்.டி.ஆர். (என்.டி.ராமாராவ்) மருத்துவப் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் பெயரை, தனது தந்தையின் பெயரான ஒய்.எஸ்.ஆர்.(ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி) என மாற்ற ஆந்திர முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். 

இதற்கான மசோதாவும் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 21 அன்று நிறைவேற்றப்பட்டது. 

இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள என்.டி.ஆரின் தெலுங்கு தேசம் கட்சியினர், பல்வேறு வகைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

பெயரை மாற்றிவிடுவதால் என்.டி.ஆரின் புகழை அழிக்க முடியாது என்று என்.டி.ஆரின் மகனும் நடிகருமான ஜூனியர் என்.டி.ஆர். கூறியுள்ளார். 

ஜூனியர் என்.டி.ஆர்.
ஜூனியர் என்.டி.ஆர்.

இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சித் தலைவரும் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளாவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

ஜெகன் மோகன் ரெட்டியின் முடிவு, மறைந்த தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் கோடிக்கணக்கான ரசிகர்களை அவமதிப்பது போன்றது என்று கூறியுள்ளார். 

'இன்று இந்த அரசு, என்.டி.ஆருக்குப் பதிலாக ஒய்.எஸ்.ஆரின் பெயரை மாற்றும். நாளை மற்றொரு அரசு பெயரை மாற்றலாம். அப்படி மாற்றினால் இது ஒய்.எஸ்.ஆரை அவமதித்ததாகாதா?' என்று கேள்வி எழுப்பியுள்ள ஷர்மிளா, தனது தந்தை ராஜசேகர ரெட்டி ஒரு சிறந்த மற்றும் பிரபலமான தலைவர் என்றும் அவருடைய மதிப்பை உயர்த்துவதற்கு வேறு தலைவர்களின் பெயரை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

மக்களிடையே ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சித் தலைவர் ஷர்மிளா. 
மக்களிடையே ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சித் தலைவர் ஷர்மிளா. 

மேலும், 'ஒய்.எஸ்.ஆருக்கு யாருடைய புகழும் தேவையில்லை, அவரைப் போல யாரும் அவ்வளவு அந்தஸ்து பெறவில்லை, அவர் ஒரு மருத்துவர் மற்றும் அரசியல்வாதி மட்டுமல்ல, ஏழைகளின் கஷ்டங்களை புரிந்துகொண்டு அவர்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகளை இலவசமாக வழங்கிய சிறந்த மனிதநேயவாதி. அவர் மறைந்த அதிர்ச்சியில் 700 பேர் இறந்தனர்' என்றார். 

ஷர்மிளா, கடந்த ஆண்டு தெலங்கானாவில் ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். ஆந்திரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போல, தெலங்கானாவில் தனது கட்சியை நிலைநிறுத்துவதே நோக்கம் என்று கூறியுள்ளார். தற்போது விகாராபாத் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். 

1986ல் நிறுவப்பட்ட ஆந்திர மருத்துவப் பல்கலைக்கழகம் 1998 முதல் என்.டி.ஆர். பல்கலைக்கழகம் என்று அழைக்கப்பட்டு வந்தது. தற்போது ஆந்திர சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றியதால் ஒய்.எஸ்.ஆர். பல்கலைக்கழகம் ஆனது. 

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான  சந்திரபாபு நாயுடு, பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் என்.டி.ஆரின் பெயரை மீட்டெடுக்கும் வரை ஓயமாட்டேன் என்று கூறியுள்ளார். 

ஜெகன் மோகன் ரெட்டியின் முடிவுக்கு அவரது சகோதரியே எதிர்ப்பு தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஷர்மிளாவின் இந்த கருத்து, ஆந்திர அரசின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.