ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

தமிழகம், உ.பி. ராணுவத் தளவாட வழித்தடங்களில் முதலீடு செய்யுங்கள்: தொழில் துறையினருக்கு ராஜ்நாத் சிங் அழைப்பு

இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்ற தமிழகம், உத்தர பிரதேசம் ராணுவத் தளவாட உற்பத்தி வழித்தடங்களில் முதலீடுகளை அதிகரிக்க தொழில் துறையினருக்கு

News image
Updated On :27 செப்டம்பர் 2022, 9:24 pm

 நமது நிருபர்

இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்ற தமிழகம், உத்தர பிரதேசம் ராணுவத் தளவாட உற்பத்தி வழித்தடங்களில் முதலீடுகளை அதிகரிக்க தொழில் துறையினருக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்தார்.
இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் (எஸ்ஐடிஎம்) 5-ஆவது ஆண்டு கூட்டம் தில்லி மானெக்ஷா மையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்து பேசியதாவது:
நாட்டில் 2022-23 ஆம் ஆண்டில் உள்நாட்டுத் தொழில்துறைக்கான மூலதன கொள்முதல் 68 சதவீதம் ஒதுக்கப்பட்டது. அதில் 25 சதவீதம் தனியார் துறையினருக்கு ஒதுக்கப்பட்டது. இதன்படி உள்நாட்டு ராணுவப் பாதுகாப்பு நிறுவனங்களிடம் உபகரணங்கள் வாங்க நிகழாண்டு நிதியில் ரூ.85,000 கோடி ஒதுக்கப்பட்டது.
மேலும் கூடுதலாக, பாதுகாப்புத் துறையில் தனியாருக்கு ஆய்வு மற்றும் வளர்ச்சி, புதிய தொழில் முனைவு பணிகள் ஆகியவற்றுக்கும் 25 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் புதிய பாதுகாப்புத் தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்பதற்கு வழிவகுக்கும். உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிக ஒப்பந்தம் கொடுக்கப்பட்டதன் காரணமாக சுமார் 10,000 சிறு குறு, நடுத்தர நிறுவனங்கள் பாதுகாப்புத் துறையில் இணைந்துள்ளன.
தற்போது நாடுகள் தங்கள் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனத்தின் 2021-ஆம் ஆண்டு அறிக்கையின்படி , உலக ராணுவச் செலவு 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலரை தாண்டியுள்ளது. இதை பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
தமிழகம், உத்தர பிரதேச மாநிலங்களில் அமைக்கப்பட்டு வரும் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்சார்பு இந்தியா நோக்கிலும் இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றவும் அமைக்கப்பட்டுள்ள இந்த ராணுவ வழித்தடங்களில் அதிக முதலீடு செய்து பங்களிப்பை மேலும் அதிகரிக்க வேண்டும்.
8 ஆண்டுகளுக்கு முன்பு, நமது பாதுகாப்பு ஏற்றுமதி ரூ.1,000 கோடியைக் கூட எட்டவில்லை. தற்போது ஏற்றுமதி ரூ.13,000 கோடியாக அதிகரித்துள்ளது. பாதுகாப்புத் துறை உற்பத்தி, 2025-ஆம் ஆண்டுக்குள் ரூ. 1.75 லட்சம் கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இது ரூ.35,000 கோடி ஏற்றுமதியை உள்ளடக்கியதாக இருக்கும்.
இத்தோடு, பிரதமர் மோடியின் "புதிய இந்தியா' என்ற பார்வையை நனவாக்க, அதிநவீன முறையில் குறைந்த செலவிலான பொருள்கள், தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து இந்திய பாதுகாப்புத் துறை உற்பத்தியாளர்கள் தயாரிப்புகளை வழங்க வேண்டும் என்றார் ராஜ்நாத் சிங்.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர் சங்கத்தில் தற்போது 500 உற்பத்தி நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நிகழ்ச்சியில் விமானப்படைத் தளபதி வி.ஆர். செளதரி, இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.பி.சுக்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.