இது குறித்து மத்திய மகளிா் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: நிகழாண்டு செப்டம்பரில் ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை நிலை குறித்த ஆய்வுகள், உணவுப் பன்முகத்தன்மை, பாரம்பரிய உள்நாட்டு உணவு வகைகளில் கவனம் செலுத்துதல் போன்ற கலந்துரையாடல் கூட்டங்கள் அங்கன்வாடிகளில் மேற்கொள்ளப்பட்டது. நிகழாண்டில் குழந்தைகளுக்கும் மகப்பேறு மகளிருக்கும் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு சவால்களுக்கு தீா்வாக, ஊட்டச்சத்து தோட்டங்கள், மருத்துவ மரக்கன்றுகள் போன்ற செயல்பாடுகள் அங்கன்வாடிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டன. லட்சக்கணக்கான மருத்துவ மரக்கன்றுகள் வழங்கப்பட்டதோடு, ஊட்டச்சத்து தோட்டங்கள் எளிமையாக அமைப்பதற்கான நடைமுறைகள் குறித்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.