அரிய நிகழ்வு: கர்நாடகத்தில் இரட்டைக் குட்டிகளை ஈன்ற யானை

மிகவும் அரிய நிகழ்வாக, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் பந்திபூர் புலிகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த யானை, இரட்டைக் குட்டிகளை ஈன்றுள்ளது.
கர்நாடகத்தில் இரட்டைக் குட்டிகளுடன் தாய் யானை
கர்நாடகத்தில் இரட்டைக் குட்டிகளுடன் தாய் யானை


மிகவும் அரிய நிகழ்வாக, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் பந்திபூர் புலிகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த யானை, இரட்டைக் குட்டிகளை ஈன்றுள்ளது.

வழக்கமாக யானை இரட்டைக் குட்டிகளை ஈன்றெடுப்பது என்பது அரிதிலும் அரிதானது. இரட்டைக் குட்டிகளுடன் தாய் யானை சுற்றிவரும் விடியோ சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு, விரும்பப்பட்டு வருகிறது.

வனவிலங்குகள் நல ஆர்வலர்களும், விலங்குகள் ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இந்த அரிய நிகழ்வை கொண்டாடி வருகிறார்கள்.

யானையின் உருவம் மற்றும் கர்ப்பக் காலம் அதிகம் என்பதால், யானைகள் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை ஈன்றெடுப்பது என்பது அரிதான நிகழ்வு என்பதால், இயற்கை ஆர்வலர்கள் பலரும், இந்த இரட்டை யானைக் குட்டிகளை கொண்டாடி மகிழ்கிறார்கள்.

இரட்டைக் குட்டிகளைக் காண, புலிகள் சரணாலயத்துக்கு வரும் நாள்களில் ஏராளமானோர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து புலிகள் சரணாலயத்தின் நிர்வாகிகள் கூறுகையில், மூன்று நாள்களுக்கு முன்பு தாய் யானை குட்டிகளை ஈன்றது. தாய் யானைக்கு பிரசவ வலி ஏற்பட்டுதம் அது அருகிலிருக்கும் நீர்நிலைக்குச் சென்றது. சிறிது நேரம் கழித்து தாய் யானை மெல்ல மேலே ஏறி வந்தது. பிறகு, அதன் இரண்டு குட்டிகளும் வெளியே வந்தன. அப்போது அங்கே இருந்த சுற்றுலாப் பயணிகளும், சரணாலய ஊழியர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து கரகோஷம் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அந்த நிகழ்வை அங்கிருந்த பலரும் தங்களது செல்லிடப்பேசியில் புகைப்படம் மற்றும் விடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர அது பலரால் பார்க்கப்பட்டு வைரலானது.

இதற்கு முன்பு, இதுபோன்ற இரட்டை யானைக் குட்டிகள் பிறந்தது. இங்கு 1980களில் பதிவாகியிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

வழக்கமாக யானைகள் குட்டிகளை ஈன்றெடுப்பதில் ஒரு சதவீதம் மட்டுமே இரட்டைக் குட்டிகள் பிறக்க வாய்ப்பிருக்கும். அதிலும், இரட்டைக் குட்டிகள் பிறக்கும்போது இரண்டில் ஒன்றோ அல்லது இரண்டுமோ இறக்கும் அபாயமும் அதிகம் என்கிறார்கள். இரண்டு குட்டிகளுக்கு போதுமான தாய்ப்பால் கிடைக்காது என்பதால், பிறந்த ஒரு சில மாதங்களுக்குள் ஒரு குட்டி இறக்கும் அபாயமும் இருக்குமாம்.

உலகில் எப்போதாவது இதுபோன்ற அரிய நிகழ்வு பதிவாகும். பொதுவாக யானைக் குட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு தாய்ப்பால் குடிக்குமாம். இதனால், இரட்டை யானைக் குட்டிகளைப் பெற்றெடுக்கும் யானைகள் அந்த இரண்டு ஆண்டுகளுக்குள் பல சவால்களை சமாளிக்கும் நிலைக்குத் தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com