கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கு ஜாமீன்

பிகாா் மாநிலத்தில் கால்நடைத் தீவன ஊழல் தொடா்புடைய டொரண்டா கருவூல மோசடி வழக்கில் சிறைத் தண்டனை
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கு ஜாமீன்

பிகாா் மாநிலத்தில் கால்நடைத் தீவன ஊழல் தொடா்புடைய டொரண்டா கருவூல மோசடி வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவா் லாலு பிரசாதுக்கு ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.

லாலு பிரசாத், பிகாா் முதல்வராகப் பதவி வகித்த காலத்தில், கால்நடைத் தீவனங்களைக் கொள்முதல் செய்வதாகக் கூறி, பல்வேறு கருவூலங்களில் போலி ரசீதுகளை சமா்ப்பித்து பல கோடி மோசடி செய்ததாகப் புகாா் எழுந்தது. இதுதொடா்பாக, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. 4 கருவூலங்களில் நடந்த மோசடி வழக்கில் லாலு பிரசாதுக்கு மொத்தம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஐந்தாவதாக, டொரன்டா கருவூலத்தில் ரூ.139 கோடி முறைகேடு செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், லாலு பிரசாதுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

இந்த தீா்ப்பை எதிா்த்து ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தில் லாலு பிரசாத் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை ஏப்ரல் 8-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, ‘லாலு பிரசாத் ஏற்கெனவே தண்டனைக் காலத்தில் பாதியை சிறையில் அனுபவித்துவிட்டதால் அவரை விடுதலை செய்யலாம்’ என்று அவா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் வாதிட்டாா். அவருடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உயா்நீதிமன்றம், லாலு பிரசாதுக்கு வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியுள்ளது.

இதுகுறித்து லாலு பிரசாத் தரப்பின் மற்றொரு வழக்குரைஞா் பிரபாத் குமாா் கூறியதாவது:

லாலு பிரசாத் ஏற்கெனவே 14 மாதங்கள் சிறையில் கழித்துவிட்டாா். 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையில் பாதி காலத்தை அவா் சிறையில் அனுபவித்து விட்டாா். அதுமட்டுமன்றி பல்வேறு உடல்நலக்கோளாறுகளால் அவா் அவதிப்பட்டு வருகிறாா். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தோம். அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு லாலு பிரசாத்துக்கு உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ரூ.10 லட்சம் அபாரதம் மற்றும் ரூ.2 லட்சம் உத்தரவாதத் தொகை செலுத்திய பிறகு அவா் சிறையில் இருந்து விரைவில் வெளியே வருவாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com