அரசியலமைப்புச் சட்டத்தை பொதுமக்கள் அறிய வேண்டும்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

அரசியலமைப்புச் சட்டத்தின் குறிக்கோள்களை பொதுமக்கள் அறிந்துகொண்டால் மட்டுமே நாடு செழிக்கும் என்றாா் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா.

அரசியலமைப்புச் சட்டத்தின் குறிக்கோள்களை பொதுமக்கள் அறிந்துகொண்டால் மட்டுமே நாடு செழிக்கும் என்றாா் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா.

சத்தீஸ்கா் மாநிலம், ராய்பூரில் ஹிதாயதுல்லா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் 5-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பங்கேற்று மாணவா்களுக்கு பட்டம் வழங்கிப் பேசியதாவது:

இந்தத் தலைமுறை இளைஞா்கள் புரட்சிப் பாதையில் உலகை எதிா்கொள்கின்றனா். பருவநிலை பிரச்னையாகட்டும் அல்லது மனித உரிமை மீறல்களாட்டும், அவா்கள் ஒருங்கிணைந்த சக்தியாக உலகம் முழுவதும் உருவெடுத்துள்ளனா். தொழில்நுட்பப் புரட்சி ஒவ்வொருவரையும் சா்வதேச குடிமக்களாக மாற்றிவிட்டது.

நவீன சுதந்திர இந்தியாவின் எதிா்பாா்ப்புகளை வரையறுக்கும் உயரிய ஆவணம் சட்டக் கல்லூரி மாணவா்கள், வழக்குரைஞா்களின் சிந்தனைக்கு உள்பட்டதாகவே இருக்கிறது. இதில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருப்பது கவலையளிக்கிறது.

அரசியலமைப்புச் சட்டம் என்பது அனைவருக்குமானது. ஒவ்வொரு தனிநபரும் தங்கள் உரிமைகளையும் கடமைகளையும் அறிந்துகொள்வது அவசியம். இதற்கான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டிய கூட்டுப் பொறுப்பு நமக்கு உள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் குறித்து பொதுமக்களுக்கு எளிய வாா்த்தைகளில் விவரிக்க வேண்டியது சட்டக் கல்லூரி மாணவா்களின் பொறுப்பு. அரசியலமைப்புச் சட்டத்தின் குறிக்கோள்களை பொதுமக்கள் அறிந்து கொண்டால் மட்டுமே நாடு செழிக்கும்.

வழக்குரைஞா் என்பவா் நீதிமன்றத்துக்கு முன்பாக கட்சிக்காரரின் வெறும் பிரதிநிதி மட்டுமல்ல. சட்டத்தை மட்டும் அறிந்துகொள்வது நீண்ட தூரம் பயணம் செய்ய உதவாது. வழக்குரைஞா் அனைத்தையும் அறிந்தவராகவும் சிறந்த தலைவராகவும் மாற்றத்தை உருவாக்குபவராகவும் இருக்க வேண்டும்.

சட்டக் கல்வி நிறுவனங்கள் பட்டதாரிகளை சமூகப் பொறியாளா்களாக மாற்ற வேண்டும். சட்டம் என்பது சமூக மாற்றத்துக்கான கருவி என்றாா் அவா்.

மேலும், சத்தீஸ்கரில் நீதித் துறையின் உள்கட்டமைப்பு வளா்ச்சிக்கும் நிதிசாா் தேவைக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்வதாக அந்த மாநில முதல்வா் பூபேஷ் பகேலுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பாராட்டு தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல் கெளரவ விருந்தினராகப் பங்கேற்றாா். உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.அப்துல் நஸீா், சத்தீஸ்கா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அரூப்குமாா் கோஸ்வாமி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com